Breaking News
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து 4-வது வெற்றி இலங்கையை வீழ்த்தியது

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை சுவைத்தது.

தீப்தி, மிதாலி அரைசதம்

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டெர்பியில் நேற்று நடந்த 14-வது லீக்கில் இந்தியாவும், இலங்கையும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மந்தனா 8 ரன்னிலும், பூனம் ரவுத் 16 ரன்னிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் கேப்டன் மிதாலி ராஜூம், தீப்தி ஷர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் திரட்டிய இவர்கள் ஸ்கோர் 156 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். தீப்தி ஷர்மா 78 ரன்களில் (110 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜூலன் கோஸ்வாமி 9 ரன்னில் நடையை கட்டினார். மறுமுனையில் அரைசதத்தை கடந்த மிதாலி ராஜ் 53 ரன்களில் (78 பந்து, 4 பவுண்டரி) எதிரணி கேப்டன் ரனவீராவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 48-வது அரைசதத்தை நிறைவு செய்த மிதாலி ராஜ், அதிக அரைசதங்கள் விளாசிய வீராங்கனை என்ற சாதனைக்குரியவர் ஆவார்.

233 ரன்கள் இலக்கு

13 ரன் இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட் விழுந்ததால், 250 ரன்களை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ரன்வேகம் திடீரென தளர்ந்து போனது. இறுதி கட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் (20 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (29 ரன்) ஓரளவு பங்களிப்பை அளித்தனர். இலங்கை வீராங்கனைகள் பல கேட்ச் வாய்ப்பைகளை தவற விட்ட போதிலும் 50 ஓவர்களில் இந்திய அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களே எடுக்க முடிந்தது.

அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நட்சத்திர வீராங்கனை சமாரி அட்டப்பட்டு 25 ரன்களில் கிளன் போல்டு ஆனார். விக்கெட் கீப்பர் மனோதரா சுரங்கிகா தான் அச்சுறுத்தலாக இருந்தார். அவர் 61 ரன்களில் (75 பந்து, 6 பவுண்டரி) அவுட்டான பிறகு ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. நமது வீராங்கனைகளின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. பீல்டிங்கில் கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் இவ்வளவு போராட்டத்துக்கு அவசியம் இருந்திருக்காது.

இந்தியா வெற்றி

50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 216 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பூனம் யாதவ், ஜூலன் கோஸ்வாமி தலா 2 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா, பிஷ்ட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருதை பெற்றார்.

இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பை வெகுவாக நெருங்கியது. 4-வது தோல்வியை தழுவிய இலங்கையின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற 8-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் தோல்வி

லீசெஸ்டரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. தோள்பட்டை காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ராச்சல் ஹெய்ன்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி எலிசி பெர்ரி (66 ரன்), விலானி (59 ரன்), விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே (63 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியாவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு விழுந்த 4-வது அடியாகும்.

இங்கிலாந்து ஜோடி சதம் அடித்து சாதனை

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பிரிஸ்டலில் நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. 6-வது சதத்தை எட்டிய விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் 147 ரன்களும் (104 பந்து, 24 பவுண்டரி), 3-வது சதத்தை ருசித்த டாமி பியூமோன்ட் 148 ரன்களும் (145 பந்து, 22 பவுண்டரி, ஒரு சிக்சர்) நொறுக்கினர். பெண்கள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் இரண்டு வீராங்கனைகள் 140 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும். அத்துடன் இவர்கள் 2-வது விக்கெட்டுக்கு 275 ரன்கள் சேகரித்தனர். பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்சமாகவும் இது பதிவானது.

இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த தென்ஆப்பிரிக்க அணியால் 9 விக்கெட்டுக்கு 305 ரன்களே சேர்க்க முடிந்தது. இதையடுத்து இங்கிலாந்து 68 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை புசித்தது.

இந்த ஆட்டத்தில் இரு அணியும் சேர்ந்து மொத்தம் 678 ரன்கள் சேர்த்துள்ளன. பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட்டாக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இது தான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.