Breaking News
இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் லண்டனில் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் அவர் தாயகம் திரும்பினார். மனைவியை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருப்பதால் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டீன் எல்கர் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். தென் ஆப்பிரிக்க அணியில் ஹெய்னோ குன் அறிமுக வீரராக களம் காண வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டயர் குக் அந்த பொறுப்பில் விலகியதை தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பு ஏற்று இருக்கும் ஜோரூட் தலைமையில் இங்கிலாந்து அணி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் ஆடும் லெவனில் லியாம் டாவ்சன், மொயீன் அலி ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று கேப்டன் ஜோரூட் அறிவித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காணுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 145 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 58 போட்டியிலும், தென் ஆப்பிரிக்க அணி 32 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 55 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.