Breaking News
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மும்பையில் நடக்கிறது

சென்னையில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த போட்டி புனேயில் மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி என்ற பெயரில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியையும் (டபிள்யூ.டி.ஏ.) மும்பையில் நடத்த மராட்டிய மாநில டென்னிஸ் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2012–ம் ஆண்டில் புனேயில் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி (ராயல் இந்தியன் ஓபன்) நடைபெற்றது.

அதன் பிறகு அந்த போட்டி அங்கு நடைபெறவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி மும்பையில் வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படுகிறது.  மும்பை ஓபன் டென்னிஸ் போட்டி என்ற பெயரில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் 50 இடங்களுக்குள் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு நேரடியாக பிரதான சுற்றில் விளையாட ‘வைல்டு கார்டு’ வழங்கப்படும்.

இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் நல்ல அனுபவத்தை பெறுவதுடன், தங்களது தர வரிசை புள்ளிகளை உயர்த்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று மராட்டிய மாநில டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் சுந்தர் அய்யர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.