Breaking News
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது
தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு (நீட்) விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினார்.
அமைச்சர் முகாம்
அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் கடந்த ஜூலை 31-ந் தேதியன்று முதல் டெல்லிக்குச் சென்று அங்கு முகாமிட்டு, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிரதம மந்திரி அலுவலகத்திற்கான இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங்-கையும் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், 1-ந் தேதியன்று (நேற்று) டெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்பின்போது டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி அவசர சட்டத்திற்கான நகல் மத்திய அரசுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அவசர சட்டம் குறித்து மனிதவள மேம்பாட்டு துறையிடமும், சுகாதாரத்துறையிடமும் மத்திய அரசு கருத்து கேட்கும். அவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அவசர சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவசர சட்டத்திற்கான உத்தரவை பிறப்பிப்பார்.
அதே நேரத்தில், கடந்த 2 முறை தமிழகத்தின் சார்பில் மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது மனிதவள மேம்பாட்டு துறையும், சுகாதாரத்துறையும் அந்த மசோதாக்களை நிராகரித்து விட்டது.
தமிழகத்திற்கு விலக்கு கொடுக்கப்பட்டால் மற்ற மாநிலங்களும் தமிழகத்தை முன் உதாரணம் காட்டி விலக்கு கேட்டால் என்ன செய்வது என்பது தான் இதற்கு காரணமாக பேசப்படுகிறது. எனவே தற்போது அனுப்பப்பட்டு இருக்கிற அவசர சட்ட நகலுக்கு இந்த துறைகள் ஒப்புதல் அளிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடியை இன்று (புதன்கிழமை) காலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த இருக்கிறார்.
பிரதமர் தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கும் பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.