Breaking News
‘‘4–ந்தேதிக்கு பிறகு எனது திட்டத்தை சொல்கிறேன்’’ டி.டி.வி.தினகரன் பேட்டி

அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

4–ந்தேதிக்கு பிறகு, வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இயக்கப் பணியை தொடர்ந்து செய்து, கட்சியை பலப்படுத்தி, பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவதற்காக, நான் தமிழகம் முழுவதும் சென்று இயக்கத் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்காகவும், பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காகவும் அயராது உழைப்பேன் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– உங்களது முதல் கட்ட பணிகள், நடவடிக்கை என்னவாக இருக்கும்?.

பதில்:– அதுகுறித்து 4–ந்தேதி உங்களிடம் சொல்கிறேன்.

கேள்வி:– ஏற்கனவே காலஅவகாசம் கொடுக்கப்பட்டு, அந்த கால அவகாசம் முடிவுக்கு வரும் நிலையில், உங்களின் செயல்பாடு என்ன?.

பதில்:– நான் எதற்காக கால அவகாசம் கொடுத்தேனோ, அதில் எள்ளளவும் முன்னேற்றம் இல்லை. அதனால், கட்சியின் தொண்டனாக மாத்திரம் அல்ல, கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் எனது பணியை இயக்கத்திற்காக செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. பல பகுதிகளில் இருந்து கடந்த 2 மாதங்களாக தொண்டர்கள் வந்து என்னை அடிக்கடி சந்தித்து செல்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தவும், 2019–ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், எல்லோரையும் தயார் படுத்துவதற்காக என்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறேன்.

கேள்வி:– கட்சி அலுவலகத்திற்கு சென்று, நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?.

பதில்:– 4–ந்தேதி முடியட்டும், உங்களது எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். இன்னும் 2 நாட்கள் இருக்கிறதே. அதன் பிறகு எனது திட்டங்களை உங்களிடம் நான் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.

கேள்வி:– துணை பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் அப்படியே தொடர்வதாக நினைக்கிறீர்களா?.

பதில்:– பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலை இருப்பதால், துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் தான் செயல்படுத்தும் நிலையில் இருக்கிறேன். அதனால், கட்சியின் நலன் கருதி எனது நடவடிக்கைகள் இருக்கும்.

கேள்வி:– கட்சி மற்றும் ஆட்சி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?.

பதில்:– அவர் ஏற்கனவே பல கருத்துகளை சொல்லியிருக்கிறார். அவரை எனது நல்ல நண்பராகத்தான் இன்றும் கருதிக் கொண்டிருக்கிறேன். கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையிலே, கட்சியை வழிநடத்த வேண்டிய இடத்தில் நான் இருப்பதால், எனது பணியை நான் நிச்சயம் செய்வேன்.

கேள்வி:– மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:– ஏதோ அனுமானத்தில் சில பத்திரிகைகள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். யூகத்தின் அடிப்படையில் எழுதப்படுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்வது நன்றாக இருக்காது.

கேள்வி:– நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வரும் அரசியல் கருத்துகளுக்கு உங்கள் பதில் என்ன?.

பதில்:– நடிகர் கமல்ஹாசன் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும். பொறுப்பான இடத்தில் இருப்பவர். மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர். அதே நேரத்தில், அமைச்சர்களும் பிறர் சொல்கின்ற குற்றச்சாட்டுகளை அமைதியாக கேட்டு, யாரையும் நாம் ஒருமையில் விமர்சிக்காமல், சரியான முறையில் அரசியல் ரீதியாக அணுக வேண்டும்.

கேள்வி:– கட்சியை பலப்படுத்துவதில் உங்களது திட்டம் என்னவாக இருக்கும்?.

பதில்:– கட்சியை பலப்படுத்துவது என்பது பிரிந்து சென்றவர்களை அதில் இணைப்பதும் அடங்கும். கட்சியை எல்லா விதத்திலும் வளம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் பணியாற்றுவேன். யாருக்காக போட்டியாகவோ, இல்லை மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்றோ நினைக்கமாட்டேன். எனது பணியை நான் செய்வேன். கடந்த 2, 3 மாதங்களாக அவர்கள் (அமைச்சர்கள்) சொன்னது பொய் என்பதும், அவர்கள் சில பயத்தினால் தான், நான் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று சொல்வதையும் காலம் உங்களுக்கு நன்றாக உணர்த்தும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.