Breaking News
வாடகை வீட்டில் இருந்து நடிகை நமீதாவை வெளியேற்ற உரிமையாளருக்கு இடைக்கால தடை சிவில் கோர்ட்டு உத்தரவு

நடிகை நமீதாவை வாடகை வீட்டில் இருந்து வெளியேற்ற வீட்டின் உரிமையாளருக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உரிமையாளர் மிரட்டல்
எங்கள் அண்ணா, பில்லா உட்பட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. இவர், சென்னை 13–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சென்னை நுங்கம்பாக்கம், வீரபத்திரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த வீட்டிற்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வாடகை தொகையை வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகரத்தினத்துக்கு தவறாமல் வழங்கி வருகிறேன். இந்த நிலையில், டிசம்பர் 31–ந் தேதிக்குள் வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் எனக்கு மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பினார்.

மேலும், நான் வாடகைக்கு இருக்கும் வீட்டிற்குள் ரவுடிகளுடன் நுழைந்து என்னையும், என்னுடைய மேலாளரையும் வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகரத்தினம் மிரட்டல் விடுத்தார்.

இலவச திறப்புவிழா
வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புக்களை துண்டித்து விடுவதாகவும், என்னை வெளியில் தூக்கி போட்டுவிட்டு, அதிக வாடகைக்கு வீட்டை பிறருக்கு வழங்கப்போதாவதாகவும் மிரட்டுகிறார்.

நான் சட்டத்தை மதித்து செயல்படக்கூடியவள். நடிப்பு தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறேன். இந்த வீட்டை பராமரிக்க பல உதவிகளை உரிமையாளருக்கு செய்துள்ளேன். இதுதவிர, வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் புதிய கடைகள் மற்றும் வீடுகள் திறப்பு விழா நடத்தும்போது, அதில் கலந்து கொண்டு கடைகள், வீடுகளை திறந்து வைத்துள்ளேன். இதற்காக அவர்களிடம் பணம் எதுவும் பெறவில்லை. இலவசமாகத்தான் திறந்து கொடுத்தேன்.

இடைக்கால தடை
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 21–ந் தேதி ரவுடிகள் சிலருடன் வந்து, வீட்டை காலி செய்யும்படி என்னை மிரட்டினார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த வீட்டை விட்டு என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால், எனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்.

எனவே, நான் அமைதியான முறையில் இந்த வீட்டில் வசிப்பதற்கும், எனக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிடவேண்டும். வீட்டை விட்டு என்னை வெளியேற்ற, அவருக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை நமீதாவை வருகிற 12–ந் தேதி வரை வீட்டை விட்டு காலி செய்யும்படி இடையூறு செய்ய வீட்டின் உரிமையாளருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.