Breaking News
லாரி உரிமையாளர்கள் இன்று, ‘ஸ்டிரைக்’

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள, இரண்டு நாள், ‘ஸ்டிரைக்’ இன்று(அக்.,9) துவங்குகிறது. வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள், நேற்று முதல் நிறுத்தப்பட்டன.

நாடு முழுவதும், 93 லட்சம் லாரிகள் நிறுத்தப்படுவதால், தீபாவளி நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.நாட்டில், லாரிகள் வாங்கும் போதும், விற்கும் போதும், 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனால், லாரி தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இதை, ஒரு முனை வரியாக்க வேண்டும். உரிமம் வாங்கும் போதே, ஓராண்டுக்கான சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மத்திய அரசிடம், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், இந்த கோரிக்கைகளை முன் வைத்தது. மத்திய அரசு, ஏற்காததால், இன்றும், நாளையும் லாரிகள் ஓடாது என, அறிவித்துள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள, லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், நேற்று முதல் இயக்கப்படவில்லை.

தமிழகத்தில், ஐந்து லட்சம் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இரண்டு நாட்கள் லாரிகள் ஓடாது என்பதால், வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, மாநிலத்திற்குள்ளான சரக்கு போக்குவரத்தும் முற்றிலும் முடங்கும். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ‘ஸ்டிரைக்’ நடப்பதால், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, பண்டிகை கால பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது.’பண்டிகை காலத்தில் மக்களை பாதிக்காத வகையில், மத்திய அரசு, லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.