Breaking News
டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து தினமும் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசு உற்பத்திக்கு உதவும் விதத்திலான தேவையற்ற பொருட்களை 48 மணி நேரத்தில் அகற்றிக் கொள்ளுமாறு வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளாட்சித் துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றாதவர்கள் மீது பொதுசுகாதாரத் துறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.23 கோடியில் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தக் காய்ச்சல் தமிழகத்தில் மட்டும்தான் இருப்பதாக எண்ணக்கூடாது, இது உலகமெங்கும் இருக்கிறது என்றார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து காப்பீட்டுத் திட்ட அலுவலர் வட்டாரத்தினர் கூறியபோது, “ஏற்கெனவே, டெங்கு பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கட்டாயம் என்ற நிலையில் உள்ள நோயாளி மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியும். ஆனால், தற்போது டெங்கு பாதிப்பு இருப்பதாக பாசிட்டிவ் ரிப்போர்ட் தெரியவந்தாலே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும். நோயாளி எத்தனை நாள் சிகிச்சை பெறுகிறாரோ அத்தனை நாட்களுக்கு மருத்துவமனைக்கு காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக இத் தொகை சேர்க்கப்பட்டுவிடும்” என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.