Breaking News
பல் கூச்சம் முதல் வாய் புற்றுநோய் வரை…

‘‘ஆரோக்கியமான வாழ்க்கை என்று வரையறுக்கும்போது, அதில் பற்களின் பராமரிப்பும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும், இன்றைய நவநாகரீக உலகில் தெளிவான பேச்சு, அழகான சிரிப்பு போன்றவை இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. எனவே, நமது பற்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்’’ என்கிற பல் மருத்துவர் சந்தனா, பற்களின் நலம் காக்கும் எளிய ஆலோசனைகளை இங்கே கூறுகிறார்…

பல் கூச்சம்

சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது பற்களின் நரம்புகளில் அதிகளவு கூச்சம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய அதற்கான பற்பசைகள், மவுத்வாஷ் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

பல் சீரமைப்பு

6 முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளின் பிரச்னைகளான விரல் சப்புதல், நாக்கைத் துருத்துதல், உதட்டைக் கடித்தல், நகம் கடித்தல் போன்ற செயல்களால் அவர்களுடைய பற்களின் சீரமைப்பில் மாறுதல் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் அவர்களுடைய பற்கள் கோணலாகவோ, தெத்துப் பற்களாகவோ மாறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே, குழந்தைகளுக்கு 7 வயதாகும்போதே பல் மருத்துவரை அணுகி அவர்களின் பற்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

முன்பு பல் கட்டுவது மற்றும் பல்

சீரமைப்பின்போது பற்களை அகற்ற நேரிடும். ஆனால், தற்போது Damon System என்கிற நவீன முறைப்படி, பற்களை அகற்றாமலேயே பல் சீரமைப்பு செய்ய முடியும்.பல் சொத்தை இனிப்பு மற்றும் இதர உணவுகள் உண்டபின் வாயினை கண்டிப்பாக நன்கு கொப்பளிக்க வேண்டும். இதுபோல் வாய் கொப்பளிக்காமல் இருப்பது, சரியான முறையில் பல் துலக்காமலிருப்பது  போன்ற செயல்களால் பற்களின் குழிக்குள் கிருமிகள் எளிதில் தங்கிவிடுகின்றன. இப்படி கிருமிகள் தங்குவதாலேயே பல் சொத்தை உருவாகிறது.

இந்த பல் சொத்தையை சரி செய்வதற்கு, பாதிக்கப்பட்ட பற்களை சுத்தம் செய்துவிட்டு நிரந்தரமாக அந்த ஓட்டையை அடைக்கலாம். ஒருவேளை சொத்தை ஆழமாக இருந்தால் வேர் சிகிச்சை(Root canal treatment) செய்வது சரியான தீர்வாகும். பல்லை அகற்றுதல் என்பது பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இறுதி சிகிச்சையாகும்.

பற்களில் கறை

பற்கள் மற்றும் பல் ஈறுகளில் கறை படிதலும் கிருமிகள் குடிபுக எளிதில் வழிவகுக்கும் காரணியாக இருக்கிறது. இதனால் ஈறுகளில் வீக்கம், சீல் வருவது மற்றும் ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. இதை சாதாரண பிரச்னையாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்கத் தவறினால், பற்களை தாங்கி நிற்கும் எலும்பு தாக்கப்பட்டு, பல் ஆட்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இறுதியில் பல் விழுவதற்கும் சாத்தியம் உள்ளது. இந்த கறை பிரச்னையை Scaling என்கிற நவீன முறையில் சரி செய்துகொள்ளலாம்.

இதேபோல் ஈறு கீழே இறங்கி

விட்டாலோ அல்லது பற்களிடையே இடைவெளி அதிகமானாலோ Periodontal flap என்கிற அறுவை சிகிச்சை மூலமாக செயற்கை எலும்புத் துகள்கள் கொண்டு சரி செய்யலாம். வாய் புற்றுநோய் குட்கா, புகையிலை உட்கொள்வதால் வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை ஆரம்ப நிலையிலேயே Biopsy போன்ற பரிசோதனைகள் மூலமாகக் கண்டறிந்து தாடை, நாக்கு போன்ற பாகங்களை அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்துகொள்ளலாம். இதேபோல், உடைந்த பல் சதைகளைக் குத்தி காயத்தை ஏற்படுத்துவதாலும் அதிலுள்ள காயம் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புற்றுநோயைக் கண்டறியும் புதிய முறை

தற்போது Velscope என்கிற நவீன கருவியின் மூலமாக வாய் புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இந்த புதிய முறையில் ஊசி மருந்து, அனஸ்தீசியா மற்றும் பயாப்சி போன்ற பரிசோதனைகள் இல்லாமலேயே புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என்பது சிறப்பு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.