Breaking News
பக்கவாத அபாயத்தைக் குறைக்கும் புதிய சிகிச்சை

மருத்துவத்துறையைப் பொறுத்தவரை மாரடைப்பு, பக்கவாதம், விபத்து என ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு உடனடி நோயறிதல் மற்றும் அவசர சிகிச்சைகளில் நேரம் என்பது அதிமுக்கியத்துவம் பெறுகிறது. இதை Golden hour என்று குறிப்பிடுகிறார்கள்.  அதிலும், பக்கவாதம் ஒருவருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்டவரை 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாக வேண்டும் என்ற கோல்டன் ஹவர் கணக்கு இருக்கிறது.

இந்த கோல்டன் ஹவர் முறைதான் தற்போது ஆறுதல் தரும் அளவுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. வெளிநாடுகளில் பிரபலமாகியிருக்கும் DAWN Trial என்ற அந்த புதிய சிகிச்சை முறை பற்றி விளக்குகிறார் எண்டோவாஸ்குலர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் விக்ரம் ஹ்யூடட்.

‘‘பக்கவாதத்தைப் பொறுத்தவரை விரைந்து கண்டறிவது மிக முக்கியம் என்பதால், நேரம் கடத்துவது நோயாளிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்தியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவிகிதத்தினரே அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், 30 ஆயிரம் மூளைச்செல்கள் இறக்கின்றன என்ற அபாயத்தை யாரும் உணர்வதில்லை.

ஸ்ட்ரோக் ஏற்பட்ட நிமிடத்திலிருந்து 6 மணிநேரத்துக்குள்ளாக சிகிச்சை தொடங்காமல் போவதால் நிறைய மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதனால்தான், அந்த 6 மணி நேரத்தை ‘Golden Hour’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சமீபத்தில் ஆய்வினை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவக் குழு ஒன்று, Mechanical Thrombectomy சிகிச்சை முறையில் ‘DAWN Trial எனப்படும் நடைமுறை சோதனையைக் கண்டறிந்துள்ளனர்.

மூளையில் உள்ள பெரிய தமனியில் திடீரென்று உருவாகும் அடைப்பினால் வரும் பக்கவாத நோய் சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் நடைமுறைதான் DAWN மருத்துவ முறை. இதன்படி கோல்டன் ஹவராக கருதப்படும் 6 மணிநேரத்தை 24 மணிநேரமாக அதிகரிக்க முடியும். போக்குவரத்து நெரிசல் அல்லது தொலைதூர பயணங்களால் தாமதமாக கூட்டிவரும் நோயாளிகளையும் DAWN சோதனை முறையால் காப்பாற்றிவிட முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 6 மணிநேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டுக்கு இந்த Dawn trail இன்னும் முழுமையாக வரவில்லை. சமீபத்தில் பெங்களூருவில் இந்த Dawn trail வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கும் கூடிய விரைவில் வந்துவிடும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.