Breaking News
திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் உயர்நிலைத் தொழிற்பயிற்சி!

தொழிற்துறையில் ஒவ்வொருநாளும் பல்வேறு மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் நிலைத்து நிற்கின்றன. அந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள உயர்நிலைப் பயிற்சி பெற அறிவுறுத்துகின்றன. அவ்வாறு தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாடு என்னும் உயர்நிலைத் தொழிற்பயிற்சி அளிக்கக்கூடிய நிறுவனம் சென்னை கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் இயங்கிவருகிறது.

அங்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, ஏன் உயர்நிலைப் பயிற்சி பெற வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார், அட்வான்ஸ்டு டிரெயினி–்ங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இணை இயக்குநர் எஸ்.மதிவாணன்.“அட்வான்ஸ்டு டிரெயினிங் இன்ஸ்டிடியூட் (ATI) என்பது மத்திய அரசு நிறுவனம். இதற்கு முன்பு Directorate General of Employment and Training (DGE&T), Ministry of Labour and Employment எனப்படும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தது.

2014ம் ஆண்டு முதல் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் (Ministry of Skill Development and Entrepreneurship) செயல்பட்டுவருகிறது. இங்குச் சிறந்த நவீன தொழில்நுட்ப உயர்நிலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற இந்தியா முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள்.”  என்ற மதிவாணன் இந்தப் பயிற்சிகளுக்கான அடிப்படைத் தகுதிகள், செயல்முறைப் பயிற்சி, பயிற்சிப் பிரிவுகள், வயதுவரம்பு உள்ளிட்ட விவரங்களைப் பட்டியலிட்டார்.

“இங்குப் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கான தகுதிகள், இங்கு வழங்கப்படும் செயல்முறைப் பயிற்சி, பயிற்சிப் பிரிவுகள் பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.அடிப்படைத் தகுதிகள்: பயிற்சி பெற அடிப்படைத் தகுதி ஐ.டி.ஐ. தொடங்கி டிப்ளமோ, பொறியியல் படிப்பு வரை. ஐ.டி.ஐ. படித்துவிட்டு தொழில் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு (டெக்னிஷியன், எலெக்ட்ரிஷியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்ட) வேலை குறித்த கூடுதல் திறனை மேம்படுத்துவதே இங்கு கொடுக்கப்படும் பயிற்சியின் நோக்கம்.

இன்றைக்குப் பல தொழில் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு என்ன வேலை செய்கிறோம், எதற்கான வேலை இது என்பதெல்லாம் தெரியாது. அதேபோல், இப்போது நடைமுறையில் உள்ள அட்வான்ஸ்டு டெக்னாலஜி பற்றியும் தெரியாது. ஐ.டி.ஐ-யில் என்ன படித்தார்களோ அதே முறையிலேயே இப்போதும் வேலை செய்துகொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட ஓர் இயந்திரம்போலவே அவர்களும் இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

செயல்முறைப் பயிற்சி: செயல்முறைப் பயிற்சி என்பது ஒரு ஆயில் நிறுவனத்தில் பணிபுரியும் ஆபரேட்டர்,  லோடிங், அன்லோடிங், காலி சிலிண்டரை தனியாகப் பிரித்து வைப்பது என ஒரேநிலையில் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். எரிவாயு அடைக்கப்பட்ட ஒரு சிலிண்டரை சென்சார் ஏன் தள்ளுகிறது, எப்படி தள்ளுகிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. அதேபோல், ஒரு ஸ்விட்ச் வேலை செய்யவில்லை என்றால் எலெக்ட்ரிஷியனைக் கூப்பிடுவார் அல்லது வேலையை முற்றிலும் நிறுத்திவிடுவார்.

இதுபோன்றவர்களுக்குத்தான் இங்கு உயர்நிலைப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அந்த ஆபரேட்டருக்கு ஓர் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து தெளிவான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது, Hydraulic and Pneumatic system முறையில் எவ்வாறு பிஸ்டன் ஒரு சிலிண்டரை தள்ளிவிடுகிறது, என்ன கொடுத்தால் தள்ளும், எப்படி தள்ளுகிறது என்பது குறித்த பிரின்சிபிள் (principle) எல்லாம் விளக்கி 80 சதவிகிதம் செயல்முறைப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி முடித்து கம்பெனிக்குப் போகும் அந்த ஆபரேட்டர் அங்கு வேலையில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அதை அவரே சரிசெய்து கொள்வார். நான்கைந்து ஆண்டுகளாக என்ன வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்பதுகூடத் தெரியாத ஒருவருக்கு இந்த ஒரு வாரம் அல்லது இரண்டு வாரப் பயிற்சி முழுத் தெளிவை ஏற்படுத்திவிடும். வேலையில் முழுத் தெளிவு ஏற்பட்டுவிட்டதால் அடுத்து என்ன செய்யலாம் எனப் புதிதாக யோசிக்க ஆரம்பித்துவிடுவார். இதனால், குவாலிட்டி மற்றும்  குவாண்டிட்டி இம்ப்ரூவ் ஆகும், உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

பயிற்சிப் பிரிவுகள்: தொழில் நிறுவனங்கள் அனுப்பும் தொழிலாளர்களுக்கு 13 வகையான உயர்நிலைத் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவை, 1.Electrical Controls & Maintenance,  2. Electronic Controls & Maintenance, 3.Process Control Instrumentation, 4.Metrology & Engineering Inspection, 5.Machine Tool Maintenance, 6.Production Technology, 7.CAD / CAM, 8.CNC CENTER,  9.Hydraulic & Pneumatic Controls, 10.Heat Engines, 11.Heat Treatment & Material Testing, 12.Advanced Welding, 13.Industrial Chemistry.  இவை அனைத்துமே குறுகியகாலப் பயிற்சிகள்தான் (ஒருவாரம், இரண்டு வாரம்).

பயிற்சியில் சேர்வதற்கான கால அட்டவணை (ஓர் ஆண்டுக்கானது), அதாவது, ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கோர்ஸ் புரோகிராமை 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு www.atichennai.org.in என்ற இணையதளத்தில் பயிற்சி கால அட்டவணை (Training Calendar) என வெளியிடப்பட்டுவிடும்.  ஒரு வருடத்தில் எப்போது கோர்ஸ்சில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அப்போது ஆன்லைனில் விண்ணப்பித்து சேர்ந்துகொள்ளலாம். முழு விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இங்கு 400 புரோகிராம் மூலம் ஆண்டுக்கு 5,000 பேருக்கு உயர்நிலைப் பயிற்சி (Advanced Training) அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற வரும் 5,000 பேரில் 4,500 பேர் கம்பெனிகளில் இருந்தே வருகிறார்கள். ஒவ்வொரு கம்பெனி யும் தங்களது ஊழியர்களின் திறனை மேம்படுத்த இங்கு அனுப்பி வைக்கிறது. இதில் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

இன்டெர்ன்ஷிப் டிரெயினிங்: உயர்நிலைத் தொழிற்பயிற்சி நிலையம், படித்து விட்டு வேலை கிடைக்காதவர்களின் திறனையும் மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் வேலையில் இருப்பவர்களின் வேலைத் திறனையும் தொழில்நுட்ப அறிவையும் அதிகப்படுத்துகிறது. அதனால், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒருவாரம் இரண்டு வாரம் இன்டெர்ன்ஷிப் டிரெயினிங்குக்கு இங்கு  பயிற்சி பெறுகிறார்கள்.

ஏனெனில், கல்லூரி களைவிட இங்கு கற்றுக்கொள்ள அதிக தொழில்நுட்ப வசதிவாய்ப்புகள் உள்ளதால் அங்கு கற்றுக்கொள்ள முடியாததை இங்கு வந்து கற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் இங்கு வந்து தங்களது தொழில்அறிவை வளர்த்துக்கொள்ளப் பயிற்சி பெறுகிறார்கள். இங்குப் பயிற்சி பெறாத முன்னணி நிறுவனங்களே இல்லை என்று சொல்லலாம்” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் மதிவாணன்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.