Breaking News
இந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்காக அந்த அணி இந்தியாவுக்கு நாளை மறுதினம் புறப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்திய போட்டிகளில் சரியாக ஆடாத பேட்ஸ்மேன்கள் கவ்ஷல் சில்வா, குசல் மென்டிஸ், வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நீக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடியே, காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் அணிக்கு திரும்புகிறார்.

இலங்கை அணி வருமாறு:- தினேஷ் சன்டிமால் (கேப்டன்), கருணாரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, மேத்யூஸ், திரிமன்னே, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரா, லாஹிரு காமகே, லக்‌ஷன் சன்டகன், விஷ்வா பெர்னாண்டோ, தசுன் ஷனகா, நிரோஷன் டிக்வெல்லா, ரோஷன் சில்வா.

இலங்கை அணி இந்திய மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஒரு போதும் வெற்றி பெற்றது கிடையாது. இந்தியாவில் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 17 டெஸ்டுகளில் 10-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான ஹெராத் கூறும் போது, ‘இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்று. கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். அந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எப்படி முழு உத்வேகத்துடன் போராடினோமோ அதே போன்று இங்கும் செயல்பட்டால் இந்திய மண்ணிலும் எங்களால் வெற்றி பெற முடியும்.
சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி, இலங்கைக்கு வந்து டெஸ்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. அந்த தொடரில் என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

ஒட்டுமொத்த அணியே தடுமாறியது. அவர்களின் வலுவான பார்ட்னர்ஷிப்பை உடைக்க இயலவில்லை. இதனால் 600 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்தனர். எனவே இந்த முறை 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக திட்டமிடுவது அவசியமாகும்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.