Breaking News
ஒட்டுமொத்த நாட்டுக்காகவே பட்ஜெட்; குறிப்பிட்ட மாநிலத்துக்கானது அல்ல’ எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு வெங்கையா நாயுடு பதில்

மத்திய பட்ஜெட் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்காகவுமே என்றும், அது குறிப்பிட்ட மாநிலங்களுக்கானது அல்ல எனவும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31–ந்தேதி தொடங்குவதாகவும், தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 1–ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆனால் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற (பிப்ரவரி) 4–ந்தேதி தொடங்கும் நிலையில், பட்ஜெட்டில் சலுகைகள் அறிவித்து ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சிக்கும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

எனவே இந்த தேர்தல்களுக்கு முன்னால் பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து உள்ள எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷனரை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தன. மார்ச் 8–ந்தேதி வரை பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்கவேண்டும் என மத்திய அரசை அறிவுறுத்துமாறு கோரிக்கை விடுத்தன.

மத்திய அரசு நிராகரிப்பு

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. ஏற்கனவே அறிவித்த தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடுவும் குறைகூறி உள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியதாவது:–

புரிந்து கொள்ள
முடியவில்லை

மத்திய பட்ஜெட் முழுவதும் நாட்டு மக்களை பற்றியும், அவர்களது எதிர்காலத்தை பற்றியுமே இருக்கும். வரிவிதிப்பு பரிந்துரைகள் என்ன? வருவாய் இனங்கள் எவை? போன்றவைதான் அதில் இடம்பெற்றிருக்கும். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டுக்கானது. குறிப்பிட்ட மாநிலங்களுக்காக மட்டும் இருக்காது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அதிருப்தியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பட்ஜெட் வேண்டாம் என்றால் வளர்ச்சியோ, முன்னேற்றமோ வேண்டாம் என்றுதான் பொருள். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஏழைகள், விவசாயிகளை ஆதரிக்க வேண்டாம் என்பது தான் உங்கள் விருப்பமா? ஏன் இதை எதிர்க்கிறீர்கள்? பட்ஜெட் என்பது பட்ஜெட் மட்டுமே.

எதிராகவே திரும்பும்

பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த தவறான தகவல்கள் தோல்வியடைந்ததாலும், தற்போதைய ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து அளித்த தவறான தகவல்கள் அவர்களுக்கு எதிராகவே திரும்பியிருப்பதாலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. இது தொடர்பாக திரும்ப திரும்ப வெளியாகும் ஆய்வு முடிவுகளை அவர்கள் எண்ணிப்பார்த்து உறைந்து போய் இருக்கின்றனர்.

எனவே தங்களுடைய செயல்திட்டங்களை மீண்டும் மாற்றியிருக்கும் எதிர்க்கட்சிகள், தற்போது பட்ஜெட்டை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களுக்கு எதிரான நடவடிக்கையான இது மீண்டும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

நன்றி் : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.