Breaking News
ஆஸ்திரேலிய அரசு மெஜாரிட்டி இழப்பு திடீர் தேர்தல் வருமா? பிரதமர் பதில்

ஆஸ்திரேலிய நாட்டில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் பதவி விலகியதால், அரசு மெஜாரிட்டி இழந்தது. இதனால் திடீர் தேர்தல் வருமா என்ற கேள்விக்கு பிரதமர் டர்ன்புல் பதில் அளித்தார்.

ஆஸ்திரேலிய நாட்டு அரசியல்வாதிகளை சமீப காலமாக உலுக்கி எடுத்து வருகிற விவகாரம், இரட்டை குடியுரிமை விவகாரம்.

அந்த நாட்டில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என அரசியல் சாசனம் தடை விதித்துள்ளது.

ஆனால் தங்களது இரட்டை குடியுரிமை பற்றி இப்போது தெரிய வந்து, பல எம்.பி.க்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதில் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி., லாரிஸ்சா வாட்டர்ஸ் (வயது 40) மற்றும் அதே கட்சியை சேர்ந்த ஸ்காட் லுத்லாம் என்ற எம்.பி.யும் பதவி இழந்தனர்.

அதைத் தொடர்ந்து எம்.பி.க்களின் இரட்டை குடியுரிமை தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது.

விசாரணை முடிவில் அந்த நாட்டின் துணைப்பிரதமர் பர்னபி ஜாய்ஸ் மற்றும் 4 எம்.பி.க்கள் இரட்டை குடியுரிமை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதில் ஏற்கனவே லாரிஸ்சா வாட்டர்ஸ், ஸ்காட் லுத்லாம் ஆகிய இருவரும் பதவி விலகி விட்டனர்.

இதையடுத்து 150 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில், ஆளும் கன்சர்வேடிவ் லிபரல் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 76-ல் இருந்து 75 ஆக குறைந்தது.

இந்தநிலையில் இப்போது ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி., ஜான் அலெக்சாண்டர் என்பவர் நேற்று இரட்டை குடியுரிமை விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் இங்கிலாந்து குடியுரிமையையும் பெற்றிருந்ததாக தெரிகிறது.

இதை உறுதி செய்யுமாறு இவர், இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். அங்கு அவரது இங்கிலாந்து குடியுரிமை உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. அதையடுத்து அவர் பதவி விலகி உள்ளார்.

இது தொடர்பாக அவர் சிட்னியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நான் பதவி விலக வேண்டும் என்பது எனது கடமையாக அமைந்துள்ளது. எனவே அதை செய்கிறேன். நான் எனது நிலையை முழுமையாக ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

இவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் ஆவார்.

இவரது பதவி விலகலால் 150 இடங்களை கொண்ட ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் லிபரல் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 75-ல் இருந்து 74 ஆக குறைந்து விட்டது. அதாவது, அரசு மெஜாரிட்டி இழந்து சிறுபான்மை அரசாகி உள்ளது.

இது பிரதமர் மால்கம் டர்ன்புல்லுக்கு பெருத்த பின்னடைவு ஆகும்.

இருப்பினும் வியட்நாம் நாட்டில் தனாங் நகரில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு அவர் பதில் அளித்தபோது, பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டார். தனக்கு 2 சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார்.

டிசம்பர் 2-ந் தேதி நடக்கவுள்ள இடைத்தேர்தல் மூலம் பர்னபி ஜாய்ஸ் மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருவார், துணைப் பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.