Breaking News
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு முதல் வெற்றி கவுகாத்தியை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி நேற்றைய ஆட்டத்தில் 3–0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 6–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சென்னை அணி, தாக்குதல் பாணியை தொடுத்தது. களத்தில் இரு அணி வீரர்களும் ஒரே மாதிரி ஆதிக்கம் செலுத்தினாலும், சென்னை அணியின் கையே சற்று ஓங்கி இருந்தது. 4–வது நிமிடத்தில் சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங் இறங்கி வந்து பந்தை திருப்பி அடித்த போது, தவறுதலாக அது கவுகாத்தி வீரர் செய்மின்லென் லென்டோன்ஜெல் வசம் சென்றது. கோல் பகுதியில் கீப்பர் இல்லாத நிலையில் அதை நோக்கி அவர் தூக்கியடித்த பந்து கம்பத்திற்கு மேலே சென்று விட்டது. இதே போல் 8–வது நிமிடத்தில் சென்னை வீரர் பிரான்சிஸ்கா அருகில் வந்து தலையால் முட்டிய பந்து மயிரிழையில் கோல் வாய்ப்பில் இருந்து நழுவிப் போனது.
சுயகோல்

11–வது நிமிடத்தில் சென்னை அணிக்கு முதல் கோல், சுயகோல் வகையில் கிடைத்தது. தங்கள் கோல் நோக்கி பறந்து வந்த பந்தை கவுகாத்தி வீரர் அப்துல் நெடியோதாத் தலையால் முட்டி வெளியே தள்ள முயற்சித்த போது, துரதிர்ஷ்டவசமாக அது கோலுக்குள் புகுந்து விட்டது. இதனால் உற்சாகம் அடைந்த சென்னை அணிக்கு 24–வது நிமிடத்தில் இன்னொரு தித்திப்பு ரபெல் அகஸ்டா மூலம் கிட்டியது. அவர் எதிரணியின் இரு தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி, லாவகமாக கோல் அடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். முதல் பாதியில் சென்னை அணி 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2–வது பாதியில் சென்னை அணியினர் ஆக்ரோ‌ஷமாக விளையாடினாலும் முன்னிலையை தக்கவைப்பதிலும் கவனமுடன் செயல்பட்டனர். 70–வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பை நழுவ விட்ட சென்னை அணி 84–வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த அத்தகைய வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக் கொண்டது. அந்த ‘பிரிகிக்’கில் ஜெய்ம் காவிலன் உதைத்த பந்து கம்பத்தில் பட்டு திரும்பி வந்தது. அந்த சமயம் அங்கு நின்ற மற்றொரு சென்னை வீரர் முகமது ரபி பந்தை வலைக்குள் அனுப்பி கோலாக்கினார். முடிவில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி அசத்தியது.
சென்னை அணிக்கு முதல் வெற்றி

இதற்கு முன்பு சென்னையில், கவுகாத்தி அணி தோற்றதில்லை. அந்த சோகத்துக்கு சென்னை வீரர்கள் முடிவு கட்டினர். தொடக்க ஆட்டத்தில் 2–3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோற்றிருந்த சென்னை அணிக்கு இந்த சீசனில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 3–ந்தேதி புனே சிட்டி அணியை அதன் சொந்த ஊரில் சந்திக்கிறது.

கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்– ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.