Breaking News
நமது கலாசார அடையாளங்களுக்கு சாதி, மத, மொழிகள் ரீதியாக தடை கிடையாது கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சலங்கைநாதம் கலைவிழா தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த கலைவிழா 10 நாட்கள் நடந்தது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்தது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, அருணாசலபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர், உத்தரகாண்ட், சத்தீஷ்கார், ஹரியானா, அசாம், சிக்கிம், திரிபுரா, காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலைவிழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் சஜீத் வரவேற்றார். இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டல பண்பாட்டு மையங்கள் நம் கலாசார வளத்தை மேம்படுத்துவதற்கும், பரவசெய்வதற்கும், பாதுகாப்பதற்கும், பயிற்சிகள், பயிலரங்கங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும் மிக அரிதான கலைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் நம் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை கிராம மக்களிடம் கொண்டு சென்று அவர்களிடையே உள்ள இடைவெளி, மொழியால் இருந்த தடைகள் உடைக்கப்பட்டுள்ளன.

தென்னக பண்பாட்டு மையம் ஏராளமான கலாசார பரிவர்த்தனை நிகழ்ச்சிகளையும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடைய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் பணியையும் செய்து வருகிறது. இதே போல மற்ற மண்டலங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும் கலைஞர்களை அனுப்புகிறது. இதன் மூலம் பொதுமக்களிடையே தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கு கலைஞர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.

தென்னக பண்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குருசிஷ்ய பரம்பரை திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயிற்சி பெற்றுள்ளனர். ஒன்றே பாரம், ஒப்பில்லா பாரம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார். நம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுவதற்கும், அதை நிலைநிறுத்தி வலிமைப்படுத்துவதற்கும் இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிடையே ஆழமான, கட்டமைக்கப்பட்ட அமைப்புகள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு உதவும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடும், ஜம்முகாஷ்மீரும் இணைக்கப்படுகிறது.

கலாசார அடையாளங்களான இசைக்கும், நடனத்துக்கும் சாதி, மத, மொழிகள் ரீதியான தடைகள் கிடையாது. நம் நாகரிகத்தின் மிக உயரிய பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளும், கலாசார விழாக்களுக்கு உயரிய கலை வடிவங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றில் இளைஞர்களை ஈடுபட ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், பரசுராமன் எம்.பி., தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.