Breaking News
ஆர்.கே.நகரில் தி.மு.க. தோல்வியா? சமூக வலைத்தள விமர்சனம் பற்றி வைகோ பேட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பரபரப்பான அரசியல் பின்னணியில் இந்த ஆண்டு தொடங்கியிருக்கிறது. ஆபத்துகளில் இருந்து தமிழகத்தின் எதிர்கால நலனை பாதுகாக்கவேண்டிய கடமையை குறிக்கோளாக கொண்டு ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

பணம் தான் எதிர்கால அரசியல் என்பது கவலை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல் முடிவையும் பணம் தான் தீர்மானித்தது. இதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது.

பொதுத்தேர்தலில் இதே நடைமுறை நீடிக்க முடியாது என்றாலும் கூட, பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். பொதுமக்களும் தங்களுடைய வாக்குகளை விற்கக்கூடாது.

முத்தலாக் சட்ட மசோதா குறித்து மத்திய அரசு, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்திருக்கவேண்டும். 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு சுதந்திர தமிழ் ஈழம் தான் தீர்வு. இதற்காக ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வைகோ அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஜனநாயகத்தில் வாக்குரிமை இருப்பதுபோல, அரசியல் கட்சி தொடங்குவதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ரஜினிகாந்துக்கும் உரிமை உள்ளது. அவர் கட்சி தொடங்குவது குறித்து நான் கருத்து எதுவும் சொல்லமாட்டேன்.

கேள்வி:- தி.மு.க. உடனான கூட்டணி வருங்காலங்களில் தொடருமா?

பதில்:- ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தோம். திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காகத்தான் கூட்டணிக்கு சென்றிருக்கிறோம். எனவே தி.மு.க.வோடு ஏற்படுத்திய கூட்டணி வருங்காலங்களிலும் தொடரும்.

கேள்வி:- நீங்கள் கூட்டணி அமைத்ததால் தான் தி.மு.க. ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட வாங்கமுடியாமல் படுதோல்வி அடைந்ததாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறதே…

பதில்:- சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பவேண்டும் என்பதற்காக சில பேர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தி.மு.க.வில் இருந்தபோது பல முறை நான் வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடி கொடுத்திருக்கிறேன். இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியும் என்னை பல முறை பாராட்டியிருக்கிறார். என்னை பொறுத்தமட்டில் எந்த அணியில் இருக்கிறோமோ, அந்த அணியின் வெற்றிக்கு முழுவதுமாக பாடுபடுவேன்.

கேள்வி:- கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் முன்னெடுத்த மாற்று அரசியல் வெற்றி பெறவில்லையே ஏன்?

பதில்:- மாற்று முயற்சி வெற்றிபெறவில்லை என்பது உண்மைதான். இளைஞர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் அந்த மாற்றம் ஏற்படலாம். ஆனால் உடனடியாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு வைகோ பதில் அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.