சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் சிறுவன் கடத்தி படுகொலை

0

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகர் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் காண்டிராக்ட் முறையில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி மஞ்சுளா (36). இவர்களுக்கு ரித்தேஷ் சாய் (10) என்ற மகன் இருந்தான். மஞ்சுளா ஏற்கனவே திருமணமாகி அவரது முதல் கணவர் இறந்துவிட்டார். முதல் கணவர் மூலம் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரது முதல் கணவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்தவர். அவர் இறந்தபிறகு வாரிசு அடிப்படையில் மஞ்சுளாவுக்கு அந்த வேலை கிடைத்தது.

அதன்பிறகு மஞ்சுளா கார்த்திகேயனை காதலித்து இரண்டாவதாக பதிவு திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் தன் தொழிலில் பெரியஅளவில் பணம் சம்பாதித்து வந்தார்.

மனைவி, மகன் மீது பாசம்

சம்பாதித்த பணத்தில் நிறைய சொத்துக்களை வாங்கினார். மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்தார். இதனால் சொத்துக்களை அவரது மனைவி பெயரில் வாங்கி வந்ததாக தெரிகிறது. மனைவியைப் போல தன் மகன் மீதும் பாசம் கொட்டி வளர்த்து வந்தார்.

கார்த்திகேயன் வசித்த அதேப்பகுதியில் நாகராஜ் (27) என்ற வாலிபர் தனது பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளோடு வாழ்ந்து வந்தார்.

பி.காம் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட அவர் சென்னை வளசரவாக்கத்தில் செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

உல்லாசம்

கார்த்திகேயனின் மகன் ரித்தேஷ் வாலிபர் நாகராஜிடம் அன்பாக பழகி வந்தார். இருவரும் அவர்கள் வசிக்கும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவார்கள். ரித்தேஷ் உடன் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து அவரது தாய் மஞ்சுளாவோடும் நாகராஜ் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்த நெருக்கம் அதீத அன்பாக மாறியது.

ரித்தேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் இருந்து வந்தவுடன் தினமும் மாலை 5.30 மணியளவில் ராமாவரத்திற்குச் சென்று பொம்மி என்ற ஆசிரியையிடம் இந்தி படித்து வந்தான். ரித்தேஷை இந்தி டியூசன் வகுப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் நாகராஜ்தான் அழைத்துச் செல்வார்.

சில நேரங்களில் மஞ்சுளாவும், நாகராஜோடு மோட்டார் சைக்கிளில் செல்வார். மஞ்சுளாவை அக்கா என்றுதான் நாகராஜ் அன்பாக அழைப்பார். இதனால் நாகராஜ்-மஞ்சுளா பழக்கத்தை கார்த்திகேயன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாகராஜுவும், மஞ்சுளாவும் நாளடைவில் நெருக்கமாக பழகி, உல்லாசமாக இருக்க தொடங்கினார்கள்.

கார்த்திகேயன் வீட்டில் இல்லாத நேரத்தில் நாகராஜ் வீட்டிற்குள் புகுந்து மஞ்சுளாவோடு நெருக்கமாக இருந்தார்.

நேரில் பார்த்த சிறுவன்

இவர்களின் உல்லாச நெருக்கத்தை சிறுவன் ரித்தேஷ் நேரில் பார்த்துவிட்டதாக தெரிகிறது. ரித்தேஷ் நாகராஜை செல்லமாக மாமா என்றுதான் அழைப்பான். நாகராஜ் மஞ்சுளாவோடு ஒன்றாக இருந்துவிட்டு செல்வதை தன் தந்தை கார்த்திகேயனிடம் ரித்தேஷ் வெகுளித்தனமாக கூறிவிட்டான். கார்த்திகேயனும் நாகராஜ், மஞ்சுளா நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்து இதயமே நொறுங்கி போனார்.

நாகராஜை கடுமையாக கண்டித்தார். நாகராஜ் தனது வீட்டிற்கு வருவதற்கும் தடை விதித்தார் என்றாலும் நாகராஜ் மஞ்சுளாவோடு தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். நாகராஜ் வேலை செய்யும் கட்டுமான நிறுவனம் தாம்பரம் விமானப்படை சாலையில் பெரியளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியுள்ளது.

அவருக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் நாகராஜ் தங்கி வந்தார்.

நட்பு நீடித்தது

தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு மஞ்சுளாவை அழைத்து வந்து நாகராஜ் அடிக்கடி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலும் கார்த்திகேயனுக்கு தெரிய வந்தது. இதனால் நாகராஜ் வீட்டிற்கு நேரடியாக சென்று கார்த்திகேயன் கண்டித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை கார்த்திகேயன் குடும்பத்தில் பூதாகரமாக வெடித்து பிரச்சினை தீராததால், கார்த்திகேயன் போலீஸ் உதவியை நாடினார்.

எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் நாகராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டது. நாகராஜ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் சிறுவன் ரித்தேஷ் நேற்று முன்தினம் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன் வழக்கம்போல ராமாவரத்தில் இந்தி டியூஷன் வகுப்பிற்கு சென்றான்.

திரும்பி வரவில்லை

ரித்தேஷ் வழக்கமாக இரவு 8 மணிக்குள் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவான். ஆனால் சம்பவத்தன்று திரும்பி வராததால் கார்த்திகேயன் ரித்தேஷை தேட ஆரம்பித்தார். அவரோடு சேர்ந்து மஞ்சுளாவும் தேடினார். டியூஷன் ஆசிரியையிடம் சென்று விசாரித்தார்கள்.

அப்போது மாலை 6.30 மணியளவில் நாகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவன் ரித்தேஷை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. கண் டாக்டரிடம் சிகிச்சைக்கு காட்ட வேண்டும் என்று மஞ்சுளா அழைத்து வரச்சொன்னதாக சிறுவன் ரித்தேஷை தனது மோட்டார் சைக்கிளில் நாகராஜ் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

நாகராஜ் செல்போனில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கார்த்திகேயன் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் தனது மகனை மீட்டுத்தரும்படி புகார் மனு கொடுத்தார்.

போலீசார் தேடினார்கள்

எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். நாகராஜையும், சிறுவன் ரித்தேஷையும் தேடினார்கள். மஞ்சுளாவை நாகராஜனோடு போனில் பேச வைத்ததாகவும், அப்போது அவர் போனை எடுத்து பேசியதாகவும் தெரிகிறது.

நாகராஜ் ராமாவரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை உடனடியாக கைது செய்து சிறுவனை காப்பாற்ற போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் அரவிந்தன், உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், பாலமுரளி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து நாகராஜை ராமாவரம் பகுதியில் போலீசார் தேடினார்கள்.

சிறுவன் கொலை – கைது

நேற்று அதிகாலையில் நாகராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகராஜோடு சிறுவன் ரித்தேஷ் இல்லை.

ரித்தேஷை எங்கே? என்று நாகராஜிடம் கேட்டபோது, ரித்தேஷை கொலை செய்துவிட்டதாகவும், அவனது உடலை தாம்பரம் விமானப்படை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவலை சொன்னார். இந்த தகவலை கேட்டு கார்த்திகேயன் கதறி அழுதார். மஞ்சுளாவும் பதறி துடித்தார்.

உடல் மீட்பு

நேற்று அதிகாலையில் ரித்தேஷின் உடல் வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு நாகராஜை போலீசார் அழைத்துச் சென்றனர். உடல் இருந்த அறையை திறந்து பார்த்தபோது, ரித்தேஷ் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பீர் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்தும், இரும்பு கம்பியால் தலையில் தாக்கியும் ரித்தேஷ் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தான். தலை நொறுங்கிப்போய் மூளை சிதறிவிட்டது. ரித்தேஷின் உடலை போலீசார் மீட்டனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.