Breaking News
கலெக்டர்கள் மாநாடு துவங்கியது

நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, சென்னையில், இன்று துவங்கியது. இதில், வளர்ச்சி திட்டங்கள், சட்டம் – ஒழுங்கு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாடு நடைபெறும்.

பட்டியலிடுவர்

மாவட்ட வாரியாக என்னென்ன திட்டங்கள் தேவை; எந்தெந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவை என, கலெக்டர்கள் பட்டியலிடுவர்.

சட்டம் – ஒழுங்கு நிலை, ஜாதி, மதம் மற்றும் அரசியல் ரீதியாக, தங்கள் மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதை, காவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பர். இவற்றை, தலைமை செயலர் மற்றும் துறை செயலர்கள் தொகுத்து, முதல்வரிடம் தெரிவிப்பர்.மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மாநில அரசின் புதிய திட்டங்களை, மாநாட்டின் மூன்றாவது நாளில், முதல்வர் அறிவிப்பார்.
மேலும், சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும்.ஆனால், கலெக்டர்கள் மாநாடு, 2013க்குபின் நடக்கவில்லை. 2014ல், முதல்வர் பதவியை ஜெ., இழந்ததால், பன்னீர்செல்வம் முதல்வரானார்.
கலெக்டர்கள் மாநாட்டை நடத்த, அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும், மாநாடு நடத்தப்படவில்லை.

அனுமதி

இந்நிலையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை நடத்த, முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். அதன்படி, கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாடு, இன்று துவங்குகிறது.முதல் நாளான இன்று, கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும்; நாளை மாவட்ட கலெக்டர்கள் மட்டும், பங்கேற்கும் கூட்டமும், நாளை மறுநாள் காவல் துறை அதிகாரிகள் கூட்டமும் நடைபெற உள்ளது. மாநாடு முடிந்த பின், புதிய அறிவிப்புகளை, முதல்வர், பழனிசாமி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.