Breaking News
சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த மாதம் 29-ந் தேதி புறப்பட்டார். முதலில் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பினரிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூர் புறப்பட்டார். அங்கு செல்லும் வழியில் மலேசியாவில் சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்தார். அவரை மலேசிய துணை பிரதமர் டாக்டர் வான் அஜிஜா வரவேற்றார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் மகாதீர் முகமதுவை, மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 92 வயதான மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றதற்கு, மோடி வாழ்த்து தெரிவித்தார். இருநாட்டு தலைவர்களும் ராஜ்ஜிய ரீதியிலான ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்து பேசினர். பிரதமர் பதவி ஏற்ற பிறகு மகாதீர் முகமதுவை சந்திக்கும் முதல் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உடன் வர்த்தக கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

உலக நாடுகள் டிஜிட்டல் மயமாக மாறி வருவதை கருத்தில் கொண்டு, செல்போனில் பணபரிமாற்றம் செய்வதற்கான பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ. (ரூபே கார்டு), எஸ்.பி.ஐ. ஆகிய இந்திய செயலிகளை சிங்கப்பூரில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூரின் என்.இ.டி.எஸ். என்ற மின்னணு அமைப்புடன் ரூபே கிரெடிட், டெபிட் கார்டுகள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலிகள் மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்துக்கு பணபரிமாற்றம் செய்ய எளிதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சிங்கப்பூர் வர்த்தக மையத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அவர் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய, சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து செய்து இருந்தன.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-சிங்கப்பூர் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. இரு நாடுகளும் எதிர்காலத்திலும் இணைந்து செயல்படும். இந்தியாவின் கவனம் தற்போது கிழக்கு ஆசிய நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது. இதற்கு சிங்கப்பூர் இணைப்பு பாலமாக திகழ்கிறது. இந்திய பொருளாதாரம் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.

பிரதமர் மோடி நேற்று சிங்கப்பூர் சென்றாலும் அவருக்கு அரசு முறை வரவேற்பு இன்று (வெள்ளிக்கிழமை) அளிக்கப்படுகிறது. இன்று அவர் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நட்பை பலப்படுத்துவற்கான பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார். மேலும் மோடிக்கு மதிய விருந்தை அந்நாட்டு பிரதமர் இன்று அளிக்கிறார்.

பின்னர் பிரதமர் மோடி, ‘ஷாங்கரி லா’ உரையாடலில் பங்கேற்று பேச உள்ளார். அப்போது, இந்திய- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கொள்கை மற்றும் நிலை குறித்து எடுத்துரைப்பார் என்றும், குறிப்பாக அவருடைய பேச்சில் ‘சாகர்மாலா’ திட்டம் முதன்மையாக இருக்கும் என்றும் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பேச இருக்கும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.