Breaking News
வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் ரூ.43 ஆயிரம் கோடி காசோலை பரிமாற்றங்கள் முடங்கின

சம்பள உயர்வு வேண்டும், தனியார் மயம் கூடாது, வங்கிகளை இணைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 9 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

2-வது நாளான நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளை வளாகத்தில் வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.

இதனால் நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்து 500 கிளைகள் மூடப்பட்டு இருந்தன.

இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 56 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 9 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனால் வங்கி பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிமாற்றங்கள் முடங்கின.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு சேவை குறைபாடு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே சமயம் வேலைநிறுத்தத்தையொட்டி அரசோ அல்லது வங்கி நிர்வாகங்களோ எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வங்கி ஊழியர்களின் நியாயமான உணர்வுகளை புரிந்துகொண்டு வங்கி நிர்வாகங்கள் வங்கி ஊழியர்கள் சங்ககங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.

அதை விடுத்து, வங்கி நிர்வாகங்கள் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் அதிக போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

வங்கி நிர்வாகங்களின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக கிளை தலைவர் தி.தமிழரசு, பொதுச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் மற்றும் தாமஸ் பிராங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.