Breaking News
பயணம் செய்ய அனுமதி மறுப்பு: டெல்லி விமான நிலையத்தில் தவித்த டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள்

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 17 பேர் கொண்ட இந்திய டேபிள் டென்னிஸ் குழுவினர் நேற்று காலை டெல்லி விமான நிலையத்துக்கு சென்றனர்.

டேபிள் டென்னிஸ் அணியினர் செல்வதற்காக பதிவு செய்து இருந்த ஏர் இந்தியா விமானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. 10 டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு மட்டுமே டிக்கெட் உறுதியாகி இருக்கிறது. மற்ற 7 பேருக்கு இடமில்லை என்று கூறி பயணம் செய்ய அனுமதி அளிக்க ஏர் இந்தியா நிறுவனம் மறுத்து விட்டது.

இதனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் சீனியர் வீராங்கனை மவுமா தாஸ், மதுரிகா, சுதிர்தா மற்றும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களான சரத்கமல், சத்யன், ஹர்மீத் தேசாய் ஆகியோர் விமான நிலையத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மனிகா பத்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த விவகாரத்தில் மத்திய விளையாட்டு மந்திரி மற்றும் பிரதமர் அலுவலகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து இந்திய விளையாட்டு ஆணையம் வீரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. எஞ்சிய 7 டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளும் நேற்று இரவு ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வீரர்-வீராங்கனைகளுக்கு பயணம் செய்ய அனுமதி அளிக்க மறுத்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘விளையாட்டு வளர்ச்சிக்கு ஏர் இந்தியா பெரிய அளவில் உறுதுணையாக இருந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் மீது எப்பொழுதும் உயர்வான மரியாதை வைத்து இருக்கிறது. இந்திய டேபிள் டென்னிஸ் அணி வெவ்வேறு பி.என்.ஆர்.எண்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தது. இட மில்லாதது மற்றும் தாமதமாக வருகை தந்ததினால் சில வீரர்களை பயணம் செய்ய அனுமதிக்க முடியவில்லை. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.