Breaking News
“தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை”: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி

தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இந்நிலையில், லக்னோவில் ரூ.60 ஆயிரம் கோடிமதிப்பிலான 81 திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் தொழிலதிபர்கள் பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, கவுதம் அதானி, எஸல் குழுமத்தலைவர் சுபாஷ் சந்திரா, ஐடிசி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள், விஜபிக்கள் பங்கேற்றிருந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக கட்சி, தொழிலதிபர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறது, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கு இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மிகப்பெரிய அளவிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்த உத்தரப்பிரதேச அரசை நான் பாராட்டுகிறேன். மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கடமையுடன் முதல்வர் ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இது பாராட்டுக்குரியது.

நாங்கள் எப்போதும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில், துணை நிற்பதில் தயக்கம் காட்டுபவர்களோ அல்லது அஞ்சி நிற்பவர்களோ அல்ல.

நாட்டில் உள்ள விவசாயிகள், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளிகள் ஆகியோர் நாட்டுக்குப் பங்களிப்பு செய்வதைப் போல், தொழிலதிபர்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

உங்களுடைய சிந்தனை, எண்ணம் தெளிவு இல்லாமல், யாருடனும், யாருக்கவும் ஆதரவு கொடுக்கவோ, துணை நிற்கவோ முடியாது. மகாத்மா காந்தியின் சிந்தனை தெளிவாக இருந்தது. அதனால்தான், பிர்லா குடும்பத்துடன் துணைநிற்பதில் அவருக்குத் தயக்கம் இல்லை.

தொழிலதிபர்களை வெளிப்படையாகச் சந்திக்காமல், திரைமறைவில் சந்தித்து, செயல்படுவார்கள்தான் தொடர்ந்து அச்சப்பட்டு வருகிறார்கள். அமர்சிங் இங்கு அமர்ந்திருக்கிறார் அவர் அனைத்து விவரங்களையும் கூறுவார்(மறைமுகமாக சமாஜ்வாதிமீது தாக்கு)

நாம் தொழிலதிபர்களையும், மிகப்பெரிய வர்த்தகர்களையும் திருடர்கள், கொள்ளையடிப்பவர்கள் என்று அவமானப்படுத்த வேண்டுமா?. என்ன சொல்கிறார்கள் இவர்கள்.

தவறு செய்பவர்கள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும் அல்லது சிறையில் இருக்க வேண்டும்.இதற்கு முன் இப்படி நடக்கவில்லை. ஏனென்றால், அனைத்துமே திரைக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தது. அவ்வாறு தப்பிச் சென்றவர்கள் யாருடைய விமானத்தில் சென்றார்கள் என்பதை அறிவீர்கள்தானே.

ஒரு காலத்தில் நிலக்கரி கூட அவப்பெயரை பெற்றுத் தந்து நிலக்கரி ஊழலாக மாறியது. நான் தவறு செய்துவிட்டதாக என்னைக் குறைகூறும் சிலர், கடந்த 70 ஆண்டுகளாக என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நான் 4 ஆண்டுகள்தான் ஆட்சி செய்தேன், நீங்கள் 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தீர்கள்.

இந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. எனும் முறையில், நான் இங்கு இரு முறை, 5 முறை, 10 முறை வருவேன். நான் உங்களின் எம்.பி. தொடர்ந்து இந்த மாநிலத்துக்கு வருவேன். என்னை யாரும் இந்த மாநிலத்துக்கு அடிக்கடி வருகிறார்கள் என்று குறைகூற கூடாது(சமாஜ்வாதிக்கு பதிலடி)

சைக்கிள் டயரில்(சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னம்) காற்று ஓரளவுக்குத்தான் நிரப்ப முடியும். அதன் அளவை மீறி காற்று நிரப்பினால், இயக்கத்தையே நிறுத்திவிடும்.

நான் முதல்வராக நீண்டகாலம் இருக்கிறேன். ரூ.60 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்ப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகும். அதற்குக் கடுமையாக உழைத்த முதல்வர் யோகி, அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.

இந்தக் கூட்டம் மிகப்பெரிய சாதனைக்கூட்டமாகும். குறைந்த காலத்தில், தொழிலதிபர்களின் நம்பிக்கையை உ.பி. மாநிலம் பெற்றிருக்கிறது. முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு திருப்பும் முதல்வர் யோகியைப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.