Breaking News
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு

திமு.க. தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவர். கடந்த அரை நூற்றாண்டு காலம், தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் திகழ்ந்தவர், அரசியலிலும், திரைப்படத்துறையிலும் பல சாதனைகள் புரிந்தவர் கருணாநிதி.

தமிழக சட்டசபைக்கு 13 முறை போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர். திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேல் – அஞ்சுகம் அம்மையார்.

கருணாநிதிக்கு சண்முக சுந்தரம், பெரிய நாயகி என்று இரு தமக்கைகள். குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை கருணாநிதி. பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும், இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராகக் கருணாநிதி விளங்கினார். அப்போது ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.

‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து மன்றத்தில் பேச செய்தார்.

அண்ணாவின் பாராட்டு

1942-ல், அண்ணா நடத்தி வந்த “திராவிட நாடு” ஏட்டின் மூன்றாவது இதழில், கருணாநிதி எழுதிய “இளமைப்பலி’ என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு விழாவுக்காகத் திருவாரூர் வந்த அண்ணா, “இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் போய் நின்றார். “கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார்” என்று நினைத்திருந்த அண்ணா, ஒரு சிறுவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

1944 செப்டம்பர் 13-ந்தேதி கருணாநிதிக்கு திருமணம் நடந்தது. மணமகள் பெயர் பத்மா. கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றைப் பார்த்துப் பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக கருணாநிதியை நியமித்தார். 1916-ல், திராவிடக் கழகத்தின் கொடி உருவாக்கப்பட்ட போது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு, கருணாநிதி தன் ரத்தத்தை காணிக்கை ஆக்கினார்.பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

திரை உலகப் பிரவேசம்

இந்தச் சமயத்தில் கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்தார். கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின. மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் படத்தில் அவர் பெயர் விளம்பரப்படுத்தப்படவில்லை.

திராவிடர் கழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அவர் மனைவி பத்மா, கணவரையும் கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார். 1948 செப்டம்பர் 15-ந்தேதி, தயாளு அம்மாளை கருணாநிதி மணந்து கொண்டார்.

திராவிடர் கழகத்தில் பிளவு

1949 ஜூலை 9-ந்தேதி, தனக்கு வாரிசுரிமை வேண்டுமென்பதற்காக மணியம்மையை பெரியார் மணந்தார். இதனால் திராவிடர் கழகம் பிளவுபட்டு, செப்டம்பர் 17-ந்தேதி அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உதயமாயிற்று.

தி.மு.கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராய் விளங்கிய கருணாநிதி, மாடர்ன் தியேட்டர் தயாரித்த “மந்திரி குமாரி” படத்துக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார்.

1952-ல் “பராசக்தி” படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தைத் தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜிகணேசன் அறிமுகமானார்.

1953 ஜூலை மாதத்தில் தி.மு. கழகம் “மும்முனைப் போராட்டம்” நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரைக் “கல்லக்குடி” என்று மாற்றக் கோரி நடந்த போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார், கலைஞர். அவரைப் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியது. குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் 1963 ஜனவரி 17-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அமைச்சரானார்

1967 பொதுத்தேர்தல், தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து, தி.மு.கழகம் ஆட்சி பீடம் ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். கருணாநிதி, பொதுப்பணித்துறை அமைச்சரானார்.

பின்னர் போக்குவரத்துத் துறைக்கும் பொறுப்பேற்றார். அப்போது, பஸ்களை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

முதல்-அமைச்சர்

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கூட முடியாத நிலையில் 1969 பிப்ரவரி 2-ந்தேதி நள்ளிரவு அண்ணா மறைந்தார்.

அறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருணாநிதி முதல்-அமைச்சரானார்.

1969 பிப்ரவரி 10-ந்தேதி கருணாநிதியின் அமைச்சரவை பதவி ஏற்றது.

மத்திய-மாநில அதிகாரப் பங்கீடு பற்றி நிர்ணயிக்க ‘ராஜ மன்னார் குழு’வை அமைத்தார். 1971-ல் பாராளுமன்றத்தைத் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க, பிரதமர் இந்திராகாந்தி முடி செய்தார். இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்த கலைஞர், தமிழக சட்டசபையையும் கலைத்து விட்டுப் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் நடத்தத் துணிச்சலாக முடிவு எடுத்தார்.

ராஜாஜியும், காமராஜரும் கூட்டணி அமைத்து எதிர்த்தும், கலைஞரை வீழ்த்த முடியவில்லை.

தேர்தலில், தி.மு.கழகம் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 1971 மார்ச் 15-ந் தேதி கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்-அமைச்சரானார்.

பின்னர், கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தி.மு.கழகத்திலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். “அண்ணா தி.மு.க.” என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.

நெருக்கடி நிலை

1975-ல் இந்திராகாந்தி “நெருக்கடி நிலை”யைப் பிரகடனம் செய்தார். இதைக் கருணாநிதி எதிர்த்தார். இதன் விளைவாக, 1976 ஜனவரி 31-ந்தேதி மாலை தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மருமகன் முரசொலிமாறன் மற்றும் கணக்கற்ற தி.மு.கழக பிரமுகர்கள் தொண்டர்கள் “மிசா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெருக்கடி நிலையின்போது, கருணாநிதி சந்தித்த சோதனைகள் ஏராளம். அவைகளையெல்லாம் பொறுமையுடனும், மன உறுதியுடனும் தாங்கிக் கொண்டார்.

1977-ல் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தார். கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார்.

எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். இந்திரா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப் போனபோது, கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த போது, 28.11.1977 அன்று மு.க.ஸ்டாலினுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்தது.

8.12.1977-ல் ரிமாண்ட் காலம் முடிந்ததும், விடுதலை செய்யப்பட்டார்.

இந்திராவுடன் கூட்டணி

டெல்லியில் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா அரசும், பின்னர் சரண்சிங் அரசும் கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது.

நெருக்கடி நிலை காரணமாக இந்திரா காந்தி – கருணாநிதி நட்புறவு பாதிக்கப்பட்டிருந்த போதிலும், 1980 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இந்திரா விரும்பினார். பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து, இ.காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கருணாநிதி சம்மதித்தார்.

அந்தத் தேர்தலில், இந்திரா காந்தி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளை தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணி பிடித்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சி கலைப்பு

இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த ஜானகி அம்மாள் மந்திரிசபை, அ.தி.மு.க. பிளவு பட்ட காரணத்தால் 24 நாட்களில் கவிழ்ந்தது.

1989-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. 13 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, கருணாநிதி மீண்டும். (3-வது முறையாக) முதல்-அமைச்சரானார்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவிடாமல் அவர் மந்திரிசபையை, 1991 ஜனவரி 30-ந்தேதியன்று அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் டிஸ்மிஸ் செய்தார். பிறகு, 1991 மே மாதம் நடைபெற்ற, சட்டசபை தேர்தலில் தி.மு.கழகம் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார்.1996 மே மாதம் நடந்த தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. கருணாநிதி நான்காவது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.தமிழகத்தில் நான்காவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி ஒருவர் தான்.

13 முறை வெற்றி

1957-ல் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சையிலும், 1967, 1971 ஆகிய தேர்தல்களில் சைதாப்பேட்டையிலும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் அண்ணா நகரிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகத்திலும், 1996-2001 மற்றும் 2006 தேர்தல்களில் சேப்பாக்கத்திலும் 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திருவாரூரிலும் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் தேர்தலில் 13 முறை வென்றவர் கருணாநிதி ஒருவர் தான்.

கலையுலகச் சாதனை

அரசியலில் பெரும் சாதனைகள் படைத்துள்ள கருணாநிதி, திரைப்படத் துறையிலும் தனது முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார்.

20 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அவர், 33 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார். “பராசக்தி”, “மனோகரா”, ““மலைக்கள்ளன்”, “பூம்புகார்”, “மருதநாட்டு இளவரசி”, “மணமகள்”, “ராஜா ராணி”, “பாசப்பறவை” முதலிய படங்களில் அவர் எழுதிய வசனங்கள், காலத்தை வென்று வாழ்கின்றன. 26 படங்களை அவர் தயாரித்துள்ளார்.

பராசக்தி, ரங்கோன் ராதா, பூம்புகார், மறக்கமுடியுமா உள்பட 18 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி, பானுமதி, விஜயகுமாரி, ராதிகா உள்பட பிரபல நட்சத்திரங்கள் அவருடைய வசனத்தைப் பேசி நடித்துள்ளனர்.

இலக்கியப்பணி

புதையல், வெள்ளிக்கிழமை, ரோமாபுரிப்பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் உள்பட 15 சமூக சரித்திர நாவல்கள் படைத்துள்ள கலைஞர், தூக்குமேடை, அனார்கலி, சாக்ரடீஸ், மணிமகுடம் உள்பட 18 நாடகங்களை எழுதியுள்ளார்.திருக்குறளுக்கு இவர் எழுதிய எளிய – இனிய உரை, மிகவும் புகழ் பெற்றது. குறளின் சிறப்பை விளக்கி இவர் எழுதிய குறளோவியம், இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள், பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.தன் சுயசரிதையை “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் மூன்று நூல்களாக எழுதியுள்ளார். தன் வரலாற்றுடன், சமகாலத்தில் நடைபெற்ற இந்திய நிகழ்ச்சிகளையும், உலக நிகழ்ச்சிகளையும் பொருத்தமாக இணைத்து, ‘உலக வரலாறு’ என்று சொல்லத் தக்கவகையில் அருமையாக எழுதப்பட்டுள்ள நூல் ‘நெஞ்சுக்கு நீதி’

ஐந்துமுறை முதல்-அமைச்சர்

கருணாநிதி, தமிழக முதல் அமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தார். அது பற்றிய விவரம் வருமாறு:-

1. அறிஞர் அண்ணா மறைவுக்குப்பின், 1969 முதல் 1971 வரை.

2. 1971-ல் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். காமராஜருக்கு ஆதரவாக ராஜாஜி பிரசாரம் செய்தும் காங்கிரஸ் தோற்றது. கருணாநிதி மகத்தான வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். 1976 வரை பதவியில் இருந்தார்.

3. 1977 முதல் 1988 வரை தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, 1989-ல் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.

4. 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை நான்காவது முறையாக முதல்-அமைச்சராக பதவி வகித்தார்.

5. 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை ஐந்தாம் தடவையாக ஆட்சி நடத்தினார்.

குடும்பம்

முதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இவர் ‘பிள்ளையோபிள்ளை, பூக்காரி’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.தயாளு அம்மாளுக்கு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மூன்று மகன்கள் மகள் செல்வி.

ராஜாத்தி அம்மாளின் ஒரே மகளான கனிமொழி, ‘எம்.பி.’யாக இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.