Breaking News
சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது, வடகொரியா

தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் கடந்த 22-ந் தேதி சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறப்பட்டு உள்ளது.

மேலும், வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்த நிலையில் இப்போது சியோவை வடகொரியா விடுதலை செய்து இருப்பதை சாதகமான அறிகுறியாக தென்கொரியா எடுத்துக்கொண்டு உள்ளது.

கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.