Breaking News
திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திமுக தலைவர் கலைஞர் இறந்து 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய திமுக தலைவர் கலைஞருக்கு இடம் ஒதுக்கீடு செய்யகோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகி வாதிட்டார். திமுக தரப்பில் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பு வாதம்
திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டதாவது: ஜெ.நினைவிடத்துக்கு தடையில்லை என முன்பு கூறியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள். ஜெ.நினைவிடம் கட்ட எந்த சட்டசிக்கலும் இல்லை என்று பதில்மனு தாக்கல் செய்தார்கள். மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பதற்கு அரசு கூறும் காரணம் நியாயமானது அல்ல. ராஜாஜி, காமராஜர் ஆகியோர் ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் என்பதால் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். திராவிட சித்தாந்தம் என்பது வேறு ஆகையால் கலைஞரை அங்கு அடக்கம் செய்வது சரியாகாது. திராவிட சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மெரினாவிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். தமிழக அரசு உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அரசு தரப்பு வழக்கறிஞர் சட்டபூர்வமாக வாதாடவில்லை. பழிவாங்கும் நோக்கில் அரசு வழக்கறிஞர் வாதிடுவதாகா திமுக தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு தரப்பு வாதம்
மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கக்கோரும் வழக்கில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் வாதிட்டதாவது: ஒரே நேரத்தில் அனைத்து வழக்கும் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. முன்னாள் முதல்வர்கள் சமாதி விவகாரத்தில் கடைபிடித்த முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. பெரியாரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை. தலைமைச்செயலாளர் வெளியிட்டது செய்திக்குறிப்பு மட்டுமே; அரசாணை அல்ல. கலைஞரின் உடல் அரசு மரியாதையுடன் மிகவும் கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. கண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கருத்து
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரும் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு தரப்பு வாதம் முரண்பாடாக உள்ளது. இந்த மனு மீது உடனடியாக தீர்ப்பளிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த நீதிபதிகள் ‘வேண்டுமானால் வழக்கை ஒருவாரம் ஒத்திவைக்கலாமா? என வினவியுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.