Breaking News
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம், உதவி கோரும் பினராயி விஜயன்

கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு இடர்பாடுகளால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் மண் சரிந்தும், வெள்ளம் சூழ்ந்தும் இருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக எர்ணாகுளம், திரிச்சூர் இடையே பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. கொச்சி மெட்ரோ ரெயில் போக்குவரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26–ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 8–ந் தேதி முதல் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த இரண்டு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது மாநிலத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளா 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளத்தை எதிர்க்கொண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 80 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளன. வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 324 பேர் பலியாகியுள்ளனர். 1500க்கும் அதிகமான முகாம்களில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். உங்களுடைய உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவியாக இருக்கும், தாரளமாக உதவி செய்யுங்கள். முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி உதவலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.