Breaking News
தமிழகத்தில் மின்உற்பத்தி பாதிப்பு மின்தடை ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து வாங்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. ‘காலப்போக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம், நம் நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது’, அதனடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தமிழகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

நிலக்கரி சுரங்கம் உள்ள வட மாநிலங்களில் மழை வெள்ளம் காரணமாக போதுமான நிலக்கரியை மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், மத்திய அரசு வழங்கும் நிலக்கரியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிலக்கரி தேவையான நேரத்தில் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதனால் அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து எரிசக்தி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

வடசென்னை அனல்மின்நிலையத்துக்கு ஆண்டுக்கு 2.09 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. வடசென்னை முதல்நிலையில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், 2-ம் நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட்டும், தேசிய அனல்மின்நிலையமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் செயல்படுத்தி வரும் அனல் மின்நிலையத்தில் 3 அலகுகளில் 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட்டும், எண்ணூர் அனல்மின்நிலையத்தில் 450 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுதவிர மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 20 மற்றும் 25 நாட்களுக்கு இருப்பு வைத்திருந்த காலம் போய் போதுமான அளவு மத்திய அரசு வழங்காததால், தற்போதைய சூழ்நிலையில் 2 நாளைக்கு தான் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த இருப்பு தொடர்ச்சியாக தக்க வைக்கப்படும்.

தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து 12 ஆயிரம் மெகாவாட் வரை கிடைக்கிறது. நிலைமைக்கு ஏற்ப 1,500 முதல் 3 ஆயிரம் வரை கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அனல்மின்நிலையங்கள் தான் 8 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரத்தை வினியோகம் செய்கின்றன. மீதம் உள்ள மின்உற்பத்தி நிலையங்களில் போதுமான அளவு மின்சாரம் கிடைப்பதில்லை. எனவே நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்து பெற்று அனல்மின்நிலையங்களை இயக்குவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதேபோல் வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதல் அலகில் 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது அலகில் 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கும் கடந்த சில தினங்களாக 1410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது 400 முதல் 450 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பழைய அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டத்தில் காற்று சரிவர வீசாததால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் 400 மெகாவாட் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டு உள்ளது.

இதனால் தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.