Breaking News
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கூடாது குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க ராஜீவ் கொலையின்போது கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பாலசரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ராஜீவ் கொலையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இவரது மனைவி பாலசரஸ்வதி சென்னை பல்லாவரத்தில் வசித்துவருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் களை விடுவிக்கக்கூடாது என அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய கணவர் ராஜகுரு பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார். அங்கு விடுதலை புலிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எனது கணவர் ராஜகுருவும் கொல்லப்பட்டார்.

எனது கணவர் உடலை பொட்டலமாக எங்களிடம் கொடுத்தார்கள். என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த என் கணவரை இழந்து தவித்தேன். என் 2 பிள்ளைகள் தந்தையின் உடலை கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு பொட்டலமாக என் கணவர் உடலை கொடுத்தார்கள். என் குழந்தைகள் அழுது கதறினர். அதன்பிறகு என் குடும்பம் எத்தகைய கஷ்டத்தை அனுபவித்தது என்பது சொல்லிமாளாது.

என் குடும்பத்தின் நிலை யாருக்கும் வரக்கூடாது. அந்த அளவிற்கு நாங்கள் என் கணவரை இழந்த பிறகு கஷ்டப்பட்டோம். நாங்களும் தமிழர்கள் தான். எந்த தலைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து கேட்டதில்லை. என்னைப்போல தான் அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அத்தனை குடும்பங்களும் வேதனைகளை அனுபவித்தது.

இன்றைக்கு ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என அனைத்து தலைவர்களும் பேசி வருகிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் அப்பாவிகளா. ராஜீவ் காந்தி கொலையின்போது அங்கு செயல்பட்ட விடுதலை புலிகள் ஒற்றைகண் சிவராசன், தாணு ஆகியோருடன் இப்போது சிறையில் உள்ளவர்கள் அந்த பொதுக்கூட்ட இடத்தில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. அவர்கள் ராஜீவ் கொலையாளிகளுக்கு துணையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பதுபோல பேசிவருவது இந்த படுகொலையில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்கள் சிறையில் இருந்தால் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்றால், யார் வேண்டுமானாலும் கொலை செய்ய தயங்க மாட்டார்கள். இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.