Breaking News
பேச்சுவார்த்தையை ரத்து செய்தது, இந்தியாவின் ஆணவப்போக்கு – இம்ரான்கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூம், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷியும் அடுத்த வாரம் நியூயார்க் நகரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரையொட்டி இந்த சந்திப்பு நிகழ்வதாக இருந்தது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான மறுதினமே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் 3 போலீசாரை கடத்திச்சென்று சுட்டுக்கொன்றனர். இதனால் இந்திய அரசு உடனடியாக நியூயார்க் நகரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்படவேண்டும் என்ற எனது கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்து இருப்பது, அதன் ஆணவப்போக்கையே காட்டுகிறது. இந்தியாவின் எதிர்மறையான இந்த பதில் பாகிஸ்தானுக்கு அதிருப்தியும் அளிக்கிறது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

‘‘எனது வாழ்நாள் முழுவதும் பெரிய பதவிகளை வகித்து வந்துள்ள சிறிய மனிதர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்ததில்லை’’ என்றும் அவர் மறைமுகமாக மோடியை விமர்சித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ‘‘இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றத்தையும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்த உதவக்கூடிய நல்லதொரு பேச்சுவார்த்தையை மீண்டும் ஒரு முறை இந்தியா வீணடித்து விட்டது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்தில் அதை ரத்து செய்து இருப்பதற்கு இந்தியா கூறும் காரணமும் ஏற்புடையது அல்ல’’ என்று தெரிவித்து உள்ளது.
‘இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால் மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.