Breaking News
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எதிர்ப்பாளர்களுக்கு குட்டிக்கதை கூறி எடப்பாடி பழனிசாமி பதிலடி

நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் இந்த ஆட்சியை குறை சொல்லியும், தேவையற்ற சவால்களை விடுத்தும் வருகிறார்கள். இதை நினைக்கும்போது எனக்கு ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

பகவான் புத்தர் அறநெறிக் கொள்கைகளை பரப்பினார். அவற்றைச் சிலர் ஏற்று, அவரைப் போற்றினர். வேறு சிலர் அதை ஏற்காமல் தூற்றினர். கடுமையான சொற்களால் தாக்கியும் பேசினர். ஒரு நாள் புத்தர் ஓர் ஊருக்கு சென்றார். அங்கு ஒருவர் புத்தரை கடுமையான சொற்களால் திட்டினார். ஆனால் புத்தர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புத்தர் அவரிடம், நண்பரே அருகில் வந்து அமருங்கள் என்று அழைத்தார்.

அவரும் அவர் அருகில் சென்று அமர்ந்தார். புத்தர், நண்பரே, நீங்கள் மற்றவர்களை பார்க்கச்செல்லும்போது கையில் ஏதாவது எடுத்துச் செல்வதுண்டா? என்று கேட்டார். ஆம் பழங்களை எடுத்துச்செல்வேன் என்று அவர் கூறினார். நீங்கள் அளிக்கும் பழங்களை நீங்கள் காணச் சென்றவர் ஏற்க மறுத்தால் நீங்கள் அவற்றை என்ன செய்வீர்கள்? என்று புத்தர் கேட்டார்.

அதற்கு அவர் பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்புவேன் என்றார். உடனே புத்தர் அதைத்தான் நீங்கள் இப்போது செய்யப்போகிறீர்கள். திட்டுவது உங்கள் சுதந்திரம். அதை ஏற்பதும், ஏற்காததும் எனது சுதந்திரம். நீங்கள் என்னை அவமதித்து பேசிய பேச்சுக்களை நான் ஏற்கவில்லை. பழங்களை திரும்ப எடுத்துச்செல்வதுபோல், உங்களுடைய திட்டுக்களையும் எடுத்துச் செல்லுங்கள் என்றார்.

அதுவரையில் புத்தரை அவமதித்து பேசிய அந்த மனிதர், தனது தவறை உணர்ந்து புத்தரின் கால்களில் விழுந்து வணங்கி அவரிடம் மன்னிக்க வேண்டினார். நாளடைவில் அவர் புத்தரின் சீடராகவும் மாறினார். இதேபோல் அ.தி.மு.க. ஆட்சியின் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் எதற்கும் அடிப்படை ஆதாரம் கிடையாது. எனவே பகவான் புத்தர் அவர்கள் கூறியது போல் அனைத்து விமர்சனங்களும் அவர்களிடமே திரும்பச் செல்லும் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழாக்களில் பேசும்போது, தன்னுடைய அரசின் மீது விமர்சனம் வைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் குட்டி கதை கூறுவது வழக்கம். தற்போது அதே பாணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.