Breaking News
இந்தோனேசிய நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு

இந்தோனேசியா நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால் திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த டோங்கலா நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பலு என்ற கடலோர நகரத்தில் 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கின. இது அந்த நகரில் ஏராளமானவர்களை கடலுக்குள் வாரிச்சுருட்டியது. வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.

இந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தேசிய பேரிடர் கழக செய்தி தொடர்பு நிர்வாகி சுடோபோ பர்வோ நுக்ரோஹோ கூறும்பொழுது, நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.