Breaking News
முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ – வெஸ்ட் இண்டீஸ் திணறல்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. புதுமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி (72 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (17 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நமது வீரர்கள் நொறுக்கித் தள்ளினர். கேப்டன் கோலி சற்று நிதானம் காட்ட, ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடினார். கீமோ பால், ரோஸ்டன் சேசின் பந்து வீச்சில் சிக்சர்களை பறக்க விட்டார். மறுமுனையில் கோலி பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்தை நெருங்கிய ரிஷாப் பான்ட் 92 ரன்களில் (84 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) தேவேந்திர பிஷூவின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆகிப்போனார். அடுத்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இறங்கினார். அணியின் ஸ்கோர் 534 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி 139 ரன்களில் (230 பந்து, 10 பவுண்டரி) பந்தை தூக்கியடித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாமல் கேட்ச் ஆனார்.

இதைத் தொடர்ந்து வந்த அஸ்வின் (7 ரன்), குல்தீப் யாதவ் (12 ரன்), உமேஷ் யாதவ் (22 ரன்) உள்ளிட்டோர் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதற்கிடையே அரைசதத்தை கடந்த பிறகு அட்டகாசப்படுத்திய ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர்கள் தேவேந்திர பிஷூ, ரோஸ்டன் சேசின் ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதில் ஒரு சிக்சர் அணியின் ஸ்கோர் 600 ரன்களை கடக்க உதவியது. 78 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஜடேஜா, கடைசி விக்கெட் ஜோடியான முகமது ஷமியின் துணையுடன் தனது முதலாவது சர்வதேச சதத்தை எட்டினார். இது அவரது சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா செஞ்சுரி போட்டதும், இந்திய அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா 100 ரன்களுடனும் (132 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), முகமது ஷமி 2 ரன்னுடனும் (6 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் மெகா ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட்டுக்கு 644 ரன்கள் எடுத்ததே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தது போலவே திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (2 ரன்), கீரன் பவெல் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். இதன் பின்னர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிரண்டனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும், கீமோ பால் 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று (சனிக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. பாலோ-ஆன் ஆபத்தை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் மொத்தம் 449 ரன்கள் சேர்த்தாக வேண்டும். ஆனால் தற்போது கைவசம் 4 விக்கெட் மட்டுமே இருப்பதால் அந்த அணி பாலோ-ஆனை தவிர்ப்பது கடினம் தான்.

முதல் சதம் – ஜடேஜா நெகிழ்ச்சி

ராஜ்கோட்டில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 100 ரன்கள் விளாசினார். 38-வது டெஸ்டில் ஆடும் ஜடேஜாவுக்கு இது தான் முதலாவது சதமாகும். பின்னர் 29 வயதான ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

‘சர்வதேச கிரிக்கெட்டுக்கு நுழைந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு எனது முதல் சதத்தை அடித்திருக்கிறேன். இந்த சதம், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். ஏனெனில் இதற்கு முன்பு 80, 90 ரன்கள் வரை எடுத்த நான், அதை சதமாக மாற்ற முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறேன். முதல்தர போட்டிகளில் சதத்தையும் தாண்டி மிகப்பெரிய ரன்கள் குவித்துள்ள என்னால் சர்வதேச போட்டியிலும் சதம் காண முடியும் என்று எப்போதும் நினைப்பது உண்டு.

இன்றைய போட்டியில் நெருக்கடி இன்றி இயல்பாக விளையாடினேன். ஆனால் எந்த வித மோசமான ஷாட்டும் அடித்து விடக்கூடாது என்பதில் கவனமுடன் இருந்தேன். 100 ரன்கள் எடுப்பது வரை ஆடுவது அவசியம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது பற்றி மறுமுனையில் ஆடிய உமேஷ் யாதவ், முகமது ஷமியுடனும் தொடர்ந்து பேசினேன். ஒரு வழியாக சதத்தை எட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சதத்தை மறைந்த எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது ஆட்டத்திறனை மேம்படுத்த முயற்சிக்கிறேன். இந்த ஆண்டில் நான் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்று ஜடேஜா கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.