Breaking News
பசுமைச்சாலை வழக்கில் ஆஜராக அரசு வக்கீல்களை, பத்திரிகை வைத்து அழைக்க வேண்டுமா? ஐகோர்ட்டு கேள்வி

8 வழி பசுமைச்சாலை வழக்கில் ஆஜராக அரசு தரப்பு வக்கீல்களை, பத்திரிகை வைத்தா அழைக்க வேண்டும்? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பா.ம.க. எம்.பி., அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம்,பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தர்மபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கீழ் கோர்ட்டில் பெற்ற முன்ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘இந்த தகவல்களை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்’ என்று அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

பத்திரிகை அழைப்பு

அதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

“இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் சரியான ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. காலை முதல் அதிகாரிகள் இந்த கோர்ட்டு அறையில் உள்ளதை, நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களிடம் விவரம் கேட்டு தெரிவிக்கக்கூட அரசு வக்கீலால் முடியவில்லை. வழக்கு குறித்து தகவல் இல்லை என்றால், அரசு தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு வராதீர்கள். 8 வழிச்சாலை வழக்கு விசாரணைக்காக வரவேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்களை பத்திரிகை வைத்தா அழைக்க வேண்டும்?. ஆரம்பம் முதலே அரசு தரப்பு வக்கீல்கள், இந்த வழக்கில் அலட்சியமாக செயல்படுகிறீர்கள்” என்று நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அரசு வக்கீலின் படம்

பின்னர், ‘கடந்த வாரம் சென்னையில் நடந்த விழாவுக்காக (எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா) ஊரெல்லாம் விதிகளை மீறி ‘பேனர்கள்’ வைக்கப்பட்டன. இவ்வாறு சட்டவிரோதமாக பேனர் களை வைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன. அவ்வாறு வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்களில், இந்த ஐகோர்ட்டில் சிறப்பு அரசு பிளடராக உள்ள வக்கீலின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவை அரசு வக்கீல் மீறுவதை ஏற்க முடியாது. அரசு தரப்பு வக்கீல் பதவிகளுக்கு என்று தனி சிறப்பும், மரியாதையும், கண்ணியமும் உள்ளன. அந்த பதவிக்கு எந்த வழியாக, யாருடைய சிபாரிசு மூலமாக வந்தாலும், பதவிக்கு வந்த பின்னர், அதற்குரிய மரியாதை, கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். பேனரில் புகைப்படம் வரவேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசு வக்கீல்கள் கோர்ட்டுக்கு வரவேண்டாம்’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.