Breaking News
அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பதில் அளிக்க உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு பெரும்பாலான நாட்கள் சிகிச்சை அளித்த இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்களிடம் நேற்று முதல் ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பணியில் இருந்த பல மருத்துவர்கள், செவிலியர்கள் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.

அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள், அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களில் பலர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சாட்சியத்தின்போது ஒரு தகவலையும், குறுக்கு விசாரணையின்போது வேறொரு தகவலையும் கூறி உள்ளனர்.

இதனால் எது உண்மை? என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த முக்கியமான மருத்துவர்களிடம் நேற்று முதல் விசாரணை தொடங்கிய நிலையில் அவர்கள் விசாரணை, குறுக்கு விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிப்பதை தடுக்க விசாரணை தினத்தன்றே குறுக்கு விசாரணையை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதாவது ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் அன்றைய தினமே சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பின் குறுக்கு விசாரணைக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் விஜயசந்திரரெட்டியிடம் நேற்று ஆணையம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையையும், குறுக்கு விசாரணையையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில் நேற்று சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணைக்கு தயாராக இல்லாததால் சிகிச்சை தொடர்பான முக்கிய கேள்விகள் எதுவும் அவரிடம் ஆணையம் தரப்பில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ உபகரண தொழில்நுட்ப பணியாளர் மதிவாணன் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறையில் மருத்துவ உபகரணங்களை தினசரி மேற்பார்வையிட்டு அவை சரியான முறையில் இயங்குகின்றனவா? என்பதை இவர் உறுதி செய்ததாகவும், அவ்வாறு செல்லும்போது ஜெயலலிதா தன்னை பார்த்து ஒரு முறை கை அசைத்ததாகவும் அவர் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.