Breaking News

‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, “இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார். ஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பென் ஸ்மித் கூறுகையில், “உபயோகிப்பாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும்” என்று குறிப்பிட்டார்.

‘’பேஸ் புக் சமூக வலைத்தள நிறுவனமும், தனது உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு போனதால் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.