Breaking News
ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகளுடன் எண்ணெய், எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் ஆய்வு

2015-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 77 சதவீதம் இறக்குமதி மூலம் பெறப்பட்டது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 67 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அப்போது அறிவித்தார். இதேபோல் 2030-க்குள் இதை 50 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறி இருந்தார்.
இருந்தபோதிலும் இந்தியாவில் பயன்பாடு அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் அதற்கு கூடுதல் விலை கொடுக்கவும் நேரிடுகிறது. இதனால் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ஓ.என்.ஜி.சி.) மற்றும் ஆயில் இந்தியா ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் ஆய்வு நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதமான், ஓ.என்.ஜி.சி. தலைவர் சசி சங்கர், ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உத்பால் போரா ஆகியோர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளிடம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு, தற்போதைய உற்பத்தி திறன், அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்து நேரடியாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இவை தொடர்பான புள்ளி விவரங்களையும் அவர் கேட்டுப் பெற்றார். இதேபோல் ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தி பற்றி பிரதமர் விளக்கமாக கேட்டறிந்தார்.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த கூட்டத்தில் எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் அது தொடர்பான கொள்கையை மேலும் எளிமையாக மாற்றியமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. ஆய்வு நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சட்டரீதியாக மரபு சாரா ஹைட்ரோகார்பன் வளங்களின் உற்பத்தியை அதிகரிக்க இயலும். மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் எத்தனாலை எரிபொருள் பயன்பாட்டை அதிகப்படுத்துவது பற்றியும் அறிவுறுத்தினார்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.