Breaking News
“வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா?” பின்னணி பாடகி சின்மயி பேட்டி

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சினிமா டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி, டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பின்னணி பாடகி சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:-

வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுத்ததற்கு, ஆண்டாள் சர்ச்சை தான் பின்னணி விவகாரம் என்கிறார்கள். அது தவறு.

ஆண்டாள் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் என்னை வைத்து அரசியல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என் வலி எனக்கு தெரியும். வைரமுத்து யார் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

என்னை போல சக பாடகிகள் பலர் இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கிறார்கள். ஏதாவது சொல்லிவிட்டால் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, குடும்பத்தினர் ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுப்பது இப்போது தான் ஊடகங்களுக்கு தெரியும். அதற்கு முன்பாகவே எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் வைரமுத்து யார், எப்படிப் பட்டவர்? என்பதை தெளிவாக கூறியிருக்கிறேன்.

எனது திருமணத்துக்கு பிறகு கூட ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு வரும்படி வைரமுத்து அழைப்பு விடுத்தார். அப்போது முடியாது என்று கூறினேன். அதற்கு அவர் என்னை கடுமையாக திட்டினார். மிரட்டவும் செய்தார். இதை எனது கணவர் மற்றும் மாமனார்-மாமியாரிடம் தெரிவித்தேன். அவர்களது ஆதரவும், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும், ‘மீ டூ’ இயக்கமும் தான் என்னை இப்போது உண்மையை பேச செய்தது.

வைரமுத்து எனக்கு தொல்லை தந்த காலகட்டம் எது? என்பதற்கான ஒரே ஆதாரம் எனது பாஸ்போர்ட் தான். அதில் தான் சுவிட்சர்லாந்து போனது குறித்த ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு இருக்கிறது. சென்னையில் நாங்கள் இதுவரை 10 வீடுகளுக்கும் மேல் மாறிவிட்டோம். எனது அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்திய பாஸ்போர்ட் எங்கே போனது என்று தெரியவில்லை. அந்த பாஸ்போர்ட் கிடைத்ததும் நிச்சயம் வைரமுத்து மீது புகார் அளிப்பேன். அதற்காக வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். ஆவணங்களை சேகரித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா டைரக்டர் லீனா மணிமேகலை பேட்டியளிக்கும்போது, ‘டைரக்டர் சுசிகணேசன் மீது போலீசாரிடம் இதுவரை புகார் அளிக்காதது ஏன்?’, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அருகில் இருந்த சின்மயி ஆவேசமடைந்தார்.

அப்போது, “ஊரில் உள்ள ஆண்களை எல்லாமே அசிங்கப்படுத்த நாங்கள் வரவில்லை. எங்களுக்கு தனி கதை இருக்கிறது. இப்போது சமூக வலைத்தளங்களில் சிலர் என்னை விபசாரி எனும் அளவுக்கு கேவலமாக பேசி வருகிறார்கள். எனக்கும், என்னை போன்ற பிரச்சினைகளை சந்தித்த பெண்களுக்கும் உணர்வுகளும், வலிகளும் உண்டு. அதை புரிந்துகொள்ளுங்கள்”, என்று சின்மயி கண்ணீர் மல்க கைகூப்பியபடி கூறினார்.

கவிஞர் லீனா மணிமேகலை கூறியதாவது:-

நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்காக ஒரு இயக்கம் தொடங்கினார். ஆனாலும் ஏராளமானோர் தங்கள் பிரச்சினைகளை கூற முன்வரவில்லை. காரணம் எதிர்காலம் குறித்த பயம்தான். தற்போது ‘மீ டூ’ இயக்கம் அந்த பயத்தை உடைத்தெறிந்து இருக்கிறது. திரைத்துறையினரும், மக்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த இயக்கம் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காட்டி, குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

டைரக்டர் சுசிகணேசனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை மறுபடியும் கூறி மனம் புண்பட விரும்பவில்லை. எனது பிரச்சினைகளை தெளிவாக ‘பேஸ்-புக்’ பக்கத்தில் வெளியிட்டிருக்கிறேன். மறுபடியும் அதுகுறித்த குறுக்கு விசாரணைக்கு ஆளாக நான் விரும்பவில்லை. ‘மீ டூ’ இயக்கத்துக்கு பெரிய சினிமா பிரபலங்கள் ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். ஆனாலும் டைரக்டர்கள் ஜனநாதன், வெற்றிமாறன், சித்தார்த் ஆகியோர் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் தற்போது சித்தார்த்துக்கு, சுசிகணேசன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனி கூறியதாவது:-

இரண்டு பெரிய மனிதர்களால் எனக்கு தொல்லைகள் ஏற்பட்டது. முதலாவது நடிகர் ஜான் விஜய். நடிகர் ஜான்விஜய் ஒருமுறை நள்ளிரவில் என்னை செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசினார். நான் அவரை திட்டினேன். ‘உங்களது மனைவியிடம் இதை சொல்லவா?’, என்று கேள்வி கேட்டதும், உடனடியாக அவர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இந்த விஷயத்தை நான் வெளிப்படுத்தும்போது, பல பெண்கள் ஜான் விஜய் தன்னிடமும் இப்படி நடந்துகொண்டார் என்று கூறினார்கள்.

எனது டுவிட்டர் பதிவை பார்த்த ஜான் விஜயின் மனைவி என்னை செல்போனில் தொடர்புகொண்டார். ‘என் புருஷன் உத்தமன், தப்பே செஞ்சிருக்க மாட்டார்’, என்ற ரீதியில் பேசாமல், ‘உண்மையிலேயே என்ன நடந்தது?’, என்று என்னிடம் கேட்டார். நானும் விளக்கமாக கூறினேன். ‘இந்த விஷயம் தொடர்பாக எனது கணவரிடம் பேசுகிறேன். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்’, என்றார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதனைத்தொடர்ந்து ஜான் விஜய் என்னை தொடர்புகொண்டு, ‘நான் இதேபோல பலரிடம் பேசியிருக்கிறேன். ஆனால் இதனால் மனம் புண்படும் என்பதை உணரவில்லை. இனி இப்படி பேசமாட்டேன்’, என்று கூறினார்.

டுவிட்டர் பதிவை நீக்க சிபாரிசு

பெரிய இசை குடும்பத்தைச் சேர்ந்த கடம் உமாசங்கரும் இதேபோல எனக்கு தொல்லை கொடுத்தார். இதுகுறித்து நான் டுவிட்டரில் பதிவு செய்தேன். அந்த பதிவை நீக்கக்கோரி எனக்கு தெரிந்தவர்களிடம் அவர் சிபாரிசுக்கு போனார். ஆனால் என்னிடம் எந்த மன்னிப்புமே கேட்கவில்லை. நாகரிகம் தெரியாத அவரிடம் பல பெண்கள் இன்றும் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது தான் கொடுமை.

தற்போது விசாகா கமிட்டியை உருவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நம்பிக்கை இருக்கிறது. அந்த கமிட்டியின் நிர்வாகிகள் தேர்வு நடப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.