தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதி: தமிழகத்தில் பட்டாசு விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை

0

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஆயத்தமாகி வரும்நிலையில், புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகளின் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பட்டாசு விற்பனை மட்டும் மந்தமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், எந்த நேரத்தில் பட்டாசு வெடிப்பது என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலக்கம் அடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டி, பட்டாசு வெடித்தால் போலீஸ் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில், பலர் பட்டாசு வாங்குவதையே இந்த ஆண்டு குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளில் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை, தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நகர் முழுவதும் ஆங்காங்கே லைசென்சு பெற்றும் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் எல்லாம் எப்போதும் தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் தான் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை மந்தமாக இருப்பதாகவே வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை பாரிமுனையில் பட்டாசு கடை நடத்திவரும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பலர் பட்டாசு வாங்க ஆர்வம் காட்டவில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளிடம், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் போலீசாரின் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுப்பதால், குழந்தைகளே பட்டாசு வாங்க தயங்குகின்றனர்.

மேலும், தீபாவளி அன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பட்டாசு விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், எந்த வகை பட்டாசை வெடிக்கலாம்?, எந்த வகை பட்டாசை வெடிக்கக் கூடாது? என்று சரியாக வரையறுத்துக் கூறாததால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் தான் பட்டாசு விற்பனை மந்தமாகியுள்ளது.

விற்பனையாகாத பட்டாசுகளை திரும்ப வாங்கிய இடத்திலேயே எங்களால் ஒப்படைக்க முடியாது. அவர்கள் வாங்க மாட்டார்கள். இனி அடுத்த ஆண்டு தீபாவளிக்குத்தான் இந்த பட்டாசுகளை விற்பனை செய்ய முடியும். அதுவரை நாங்கள் தான் பாதுகாத்து வைக்க வேண்டும். அதனால், போட்ட முதலீட்டையே இந்த ஆண்டு எங்களால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.