Breaking News
‘எனது 25-வது வயது வரை தற்கொலை எண்ணம் இருந்தது’ சுயசரிதையில் ஏ.ஆர்.ரகுமான் தகவல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையை ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ எனும் பெயரில் கிரு‌ஷ்ணா திரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்டது.

இதில் ஏ.ஆர்.ரகுமான் தனது சிறுவயது வாழ்க்கை, இளமை பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களை பகிர்ந்து உள்ளார். மேலும் தனக்கும் தற்கொலை எண்ணம் இருந்ததாக அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

எனது இளமை கால வாழ்க்கை க‌ஷ்டம் நிறைந்ததாக இருந்தது. எனது 9-வது வயதில் தந்தை இறந்ததும் வாழ்க்கை வெறுமை ஆனது. இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து, அதில் வரும் வருமானத்தில்தான் வாழ்க்கையை நகர்த்தினோம். இதனால் எனது 25-வது வயது வரை எனக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தது.

ஆனால் அதுவே எனக்கு மிகுந்த தைரியத்தையும் கொடுத்தது. ஏனெனில் மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரம். ஒவ்வொருவருக்கும் காலாவதி நாள் குறிக்கப்பட்டு இருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்ற உறுதி ஏற்பட்டது.

‘ரோஜா’ படத்துக்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பது வரை விரக்தியாகவே இருந்தேன். அதற்கு முன்பாகவே நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். எனது நிஜ பெயரான திலீப்குமார் என்பதை, ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றினேன். திலீப்குமார் பெயர் எனக்கு பிடிக்காமல் போனது. அந்த பெயரையே வெறுத்தேன். அது ஏன்? என்று புரியவில்லை.

பெயரை மாற்றிய பிறகு புது மனிதனாக மாற நினைத்தேன். முழுமையாக என்னை மாற்றினேன். பழைய வி‌ஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்.

அமைதியான சூழ்நிலை எனக்கு பிடிக்கிறது. இரவு நேரத்தில் தான் அது கிடைக்கிறது. அதனாலேயே இசையமைக்கும் பணியை இரவு நேரங்களில் மேற்கொள்கிறேன். சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். அதில் நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொள்கிறேன். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாவிட்டாலும், நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன்.

இவ்வாறு சுயசரிதையில் அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.