Breaking News
‘கஜா’ புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘கஜா’ புயலினால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை சுமார் 2.30 மணியளவிலே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.
இதனால், நாகை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதுவரை 11 பேர் இறந்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சேத மதிப்பு எவ்வளவு?.

பதில்:- சேத மதிப்பு இப்பொழுது கணக்கிட ஆணையிடப்பட்டு, அதனுடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே உயிர்சேதமும், மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லாமலும் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- மீனவர்களுக்கான பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?.

பதில்:- அதுவும் கணக்கிடப்பட்டு வருகிறது. இன்று காலைதான் புயல் வந்திருக்கிறது. மீன்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லாம் சென்றிருக்கிறார்கள். கரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் சில பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அதை மீன்வளத் துறையும், வருவாய்த் துறையும் சேர்ந்து, எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பதை எல்லாம் கணக்கிட்டு, அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு, அதற்கான நிவாரணம் மீனவ மக்களுக்கு வழங்கப்படும்.

கேள்வி:- உயிரிழந்த குடும்பங்களுக்கும், படுகாயம் அடைந்த குடும்பங்களுக்கும் என்ன நிவாரணம் அளிக்கப் போகிறீர்கள்?.

பதில்:- உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும்.

கேள்வி:- நிவாரணம் என்பது தலாவா? அல்லது ஒரு குடும்பத்திற்கா?

பதில்:- ஒரு குடும்பத்திற்கு.

கேள்வி:- இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று கூறினீர்கள், காயமடைந்தவர்களுக்கு…

பதில்:- படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

கேள்வி:- இதை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு மத்திய அரசிற்கு தாக்கல் செய்யப் போகிறீர்களா?.

பதில்:- சேதங்கள் பற்றி கணக்கிட்டபின்தான், அரசு மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும். ‘கஜா’ புயலால் அதிக மரங்கள் சாய்ந்திருக்கின்றன. அப்படி சாய்ந்த மரங்களை எல்லாம் அகற்றுகின்ற பணியில் அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே ஈடுபட்டிருக்கின்றார்கள். அங்கே உள்ள குளங் கள், ஏரிகளை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி:- பாதிக்கப்பட்டவர்களை எப்பொழுது பார்க்கப் போகிறீர்கள்?.

பதில்:- பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கணக்கிடப்பட்டபின் நான் சென்றால்தான் அது முறையாக அவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். நம்முடைய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி நேரடியாக கடலோர மாவட்ட கலெக்டர்களிடம் தொடர்புகொண்டு புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய பணிகள் விவரங்களையும் உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். நாங்களும் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடலோர மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- நீங்கள் நேரில் சென்று பார்க்கவில்லையா? மேலும், நாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் மிகுந்த சேதம் ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனரே?.

பதில்:- பார்வையிடுவேன். இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு வடகிழக்கு பருவமழையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட கலெக்டர்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றோம். அந்தந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கே முகாமிட்டு, அமைச்சர்களும் முகாமிட்டு, எங்களால் நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கேயே தங்கி தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான உதவிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்யும்.

கேள்வி:- மத்திய அரசிடம் நிதி கேட்பீர்களா?.

பதில்:- இப்பொழுதுதான் புயலின் வேகம் குறைந்துகொண்டு வருகிறது. மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்துள்ளது. கடல் சீற்றத்தினால் கடலோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக சொல்கின்றார்கள். அதை நேரில் சென்று பார்த்து பிறகு தான் அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று அரசால் கணக்கிடப்பட்டு அதற்குத் தக்கவாறு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்கப்படும்.

கேள்வி:- ஏற்கனவே ‘வர்தா’ புயல் பாதிப்பிற்கே மத்திய அரசிடம் இருந்து நிதி முழுமையாக கிடைக்கவில்லை. இதற்கு நிதி கிடைக்குமா?.

பதில்:- இந்த மத்திய அரசும் கொடுக்கவில்லை. இதற்கு முன்பிருந்த மத்திய அரசும், புயலால் ஏற்பட்ட சேதங்கள் முழுவதற்கும் தேவையான நிதியை வழங்கினார்களோ, இல்லையோ எனக்குத் தெரிந்து இல்லை. நாமும் சேத மதிப்பீடு கொடுத்தோம். அதற்கு குறிப்பிட்ட அளவுதான் நிதி ஒதுக்கினார்கள், மாநில அரசின் நிதியில்தான் நாம் செலவழித்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:- வேதாரண்யம் பகுதி எந்தத் தொடர்பும் இல்லாமல், தனித்தீவாக மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.

பதில்:- நான் ஏற்கனவே தெரிவித்ததைப்போல, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, சேதங்களை மதிப்பிட்டு, அதற்கேற்றவாறு, அதற்குத் தேவையான பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு முழு வீச்சுடன் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும், நிவாரணங்கள் வழங்கப்படும்.

கேள்வி:- ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிலத்தடி நீர் உறியப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு சொல்லியிருக்கின்றார்கள். அதை ஏற்பதும், ஏற்காததும் தமிழக அரசின் பொறுப்பு என்று சொல்லியிருக்கின்றார்களே?.

பதில்:- ஏற்கனவே மாசுக்கட்டுப்பாட்டுத் துறை மூலமாக ஆங்காங்கே மாதிரி காற்று, தண்ணீர் எடுக்கப்பட்டு செய்த ஆய்வின் அடிப்படையில் தான் நாம் அறிக்கை கொடுத்திருக்கின்றோம். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதின் காரணமாக அதிகமாக, விவரமாக, முழுதாக எதுவும் சொல்லமுடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.