Breaking News
சபரிமலை: பெண்களுக்கு தடை 200 ஆண்டுகளாக இருக்கிறது – ஆய்வு நூலில் அம்பலம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியது.

5 நீதிபதிகள் அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா தவிர்த்து எஞ்சிய 4 பேரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்ல அனுமதித்து இந்த தீர்ப்பை அளித்தனர்.
இந்த தீர்ப்பு ஒரு சில பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், அய்யப்ப பக்தர் அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று நேற்றல்ல, 200 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் ராணுவ பிரிவில், அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் பெஞ்சமின் சுவைன் வார்டு, பீட்டர் எயர் கான்னர் ஆகிய இருவரும் 5 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி, ‘மெமோய்ர் ஆப் தி சர்வே ஆப் தி ட்ரவாங்கூர், கொச்சின் ஸ்டேட்ஸ்’ (திருவாங்கூர், கொச்சி மாநிலங்களின் ஆராய்ச்சி நினைவுகள்) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதி, 1893, 1901 ஆண்டுகளில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

அந்த புத்தகத்தில், “வயதான பெண்கள், சிறிய பெண்கள் (10 வயதுக்குட்பட்டவர்கள்) சபரிமலைக்கு செல்லலாம். ஆனால் பருவ வயதை அடைந்து, குறிப்பிட்ட காலகட்டம் வரையில் அங்கு பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில் எல்லா பாலுறவுகளும் தெய்வத்துக்கு (அய்யப்பனுக்கு) வெறுப்பை ஏற்படுத்துவதாகும்” என கூறப்பட்டுள்ளது.

இதை சபரிமலை தீர்ப்பில் 4 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்து போகாமல், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாதது சரிதான் என தீர்ப்பு எழுதிய நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதித்தது எழுதப்படாத சட்டமாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர் எம்.ஜி. சசிபூஷண் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.