Breaking News
உலக குத்துச்சண்டை போட்டியில் அசத்தல் தொடருகிறது: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், மேரிகோம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம், வடகொரியாவின் ஹயாங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பெண்கள் குத்துச்சண்டை

10–வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று அரங்கேறிய அரைஇறுதியில் 5 முறை சாம்பியனான இந்தியாவின் மேரிகோம், வடகொரியா வீராங்கனை கிம் ஹயாங் மியை எதிர்கொண்டார். இருவரும் முதல் வினாடியில் இருந்தே நீயா–நானா என்று ஆக்ரோ‌ஷமாக முட்டி மோதினர்.

தலா மூன்று நிமிடங்கள் கொண்ட மூன்று ரவுண்டில், முதல் 2 ரவுண்டுகளில் மேரிகோம் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை சேகரித்தார். இதனால் கடைசி ரவுண்டில் ஹயாங், ஆவேசமாக தாக்குதல் தொடுத்தார். சகட்டுமேனிக்கு மேரிகோமை நோக்கி குத்துகளை விட்டார். உடலில் குத்துகளை வாங்கிய மேரிகோம், முடிந்த அளவுக்கு முகத்தில் குத்துகளை வாங்காமல் தற்காத்துக் கொண்டார்.
மேரிகோம் வெற்றி

முடிவில் ஐந்து நடுவர்களின் சாதகமான தீர்ப்புடன் 5–0 என்ற புள்ளி கணக்கில் (29–28, 30–27, 30–27, 30–27, 30–27) மேரிகோம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

மேரிகோம் ஏற்கனவே 2002, 2005, 2006, 2008, 2010–ம் ஆண்டுகளில் உலக போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த முறையும் வாகை சூடினால் உலக குத்துச்சண்டை போட்டியில் அதிக முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய வீராங்கனை என்ற மகத்தான பெருமையை பெறுவார். அத்துடன் உலக போட்டியில் அதிக தங்கம் வென்ற வீரரான கியூபா ஜாம்பவான் பெலிக்ஸ் சவோனின் சாதனையை (6 தங்கம்) சமன் செய்து விடுவார்.

மணிப்பூரைச் சேர்ந்த 35 வயதான மேரிகோம் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஹன்னா ஒகோட்டாவை (உக்ரைன்) சந்திக்கிறார்.
ஹன்னாவை வீழ்த்துவேன்

மேரிகோம் கூறுகையில், ‘ஹயாங்கை கடந்த ஆண்டு நான் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீழ்த்திய போது அது ஒரு தரப்பு ஆட்டமாக அமைந்தது. அந்த போட்டியில் இருந்து அவர் நிறைய கற்று இருப்பதாக நினைக்கிறேன். அதே நேரத்தில் நானும் கற்றுக்கொண்டு, தடுப்பாட்டம் மற்றும் தாக்குதல் பாணியை தொடுப்பதற்கு ஏற்ப தயாராக வந்தேன். அவர் என்னை விட உயரமானவர். வலுமிக்கவர். குத்துச்சண்டையில் எப்போதுமே உயரம் ஒரு சாதகமான அம்சமாகும். ஆனால் களத்திற்குள் வந்ததும் எதிராளி நம்மை விட உயரமா, இல்லையா? என்பது எனக்கு ஒரு கவலையே கிடையாது. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறேன். மீண்டும் இறுதிசுற்றை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இறுதிப்போட்டியில் சந்திக்க இருக்கும் ஹன்னா ஒகோட்டாவை போலந்தில் நடந்த போட்டியில் தோற்கடித்து இருக்கிறேன். அந்த பந்தயத்தை மறுபடியும் பார்த்து அதற்கு ஏற்ப திட்டம் தீட்டுவேன். மறுபடியும் அவரை சாய்ப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
லவ்லினாவுக்கு வெண்கலம்

69 கிலோ பிரிவில் நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 0–4 என்ற புள்ளி கணக்கில் சென் நீன் சின்னிடம் (சீனதைபே) தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. உலக போட்டியில் லவ்லினா பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இந்திய வீராங்கனை சோனியா சாஹல் (57 கிலோ) வடகொரியாவின் ஜோ சன் வாவையும், மற்றொரு இந்திய ‘புயல்’ சிம்ரஜித் கவுர் (64 கிலோ) சீனாவின் டோ டானையும் இன்று தங்களது அரைஇறுதி ஆட்டங்களில் சந்திக்கிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.