Breaking News
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது.

நிறைவு நாளான நேற்று இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான இந்து மத ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், துறவிகள், ராம பக்தர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதனால் நகரில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தரம் காந்தா உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர் உள்பட 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் அயோத்தியில் பதற்றம் நிலவியது.

மேலும் அயோத்திக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நகரில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

அதேநேரம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என பக்தி கோஷம் எழுப்பிக்கொண்டும், பஜனை பாடல்களை பாடியவாறும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்தனர். அவர்கள் மாநாடு நடைபெறும் பதே பக்த்மால் கி பாகி பகுதியை நோக்கி அணிவகுத்து சென்றனர்.

மேலும், யோகி ஆதித்ய நாத் அரசு ராமருக்கு 151 மீட்டர் உயர சிலை நிறுவ இருக்கும் இடமான சரயு நதிக்கரையில் ராம பக்தர்கள் பூக்களை தூவியும் வழிபட்டனர்.

நேற்று நடைபெற்ற நிறைவு நாள் மாநாட்டில் பேசிய நிர்மோஹி அஹாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் ராம்ஜி தாஸ், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் ஜனவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் 4-ந் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் அறிவிப்போம்” என்றார்.

இந்து மத தலைவர்களில் ஒருவரான சுவாமி ராம்பத்ராச்சாரியா பேசுகையில், “ராமர் கோவில் விவகாரம் குறித்து மத்திய மந்திரி ஒருவரிடம் கடந்த 23-ந் தேதி பேசினேன். அப்போது அவர் டிசம்பர் 11-ந் தேதிக்கு பிறகு (5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு) பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பாக பேசுகிறேன் என்று தெரிவித்தார். எனவே ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த மசோதா நிறைவேறுவதற்கான 3-ல் 2 மடங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்” என்று குறிப்பிட்டார்.

ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் கூறும்போது, “ராமர் கோவில் கட்டுவதற்கு தேவையான உதவிகளை மாநில பா.ஜனதா அரசு செய்து தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மாநாட்டின் நிறைவில் அயோத்தியில் விரைவாக ராமர் கோவில் கட்டும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரவேண்டும் அல்லது அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுபற்றி, மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச துணைத்தலைவர் சாம்பட் ராய் கூறுகையில், “இனிமேல் ராமர் கோவில் கட்டுவதற்காக ஆலோசனை கூட்டம், மாநாடு ஊர்வலம் என எதுவும் இருக்காது. ராமர் கோவில் கட்டும் பணியைத்தான் தொடங்குவோம். அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தை 3 பங்காக பிரிக்கும்படி உத்தரவிட்ட அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்க மாட்டோம். இந்த நிலம் முழுவதும் எங்களுக்கு தேவை. ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தால் கோவில் கட்டுவதற்கு வசதியாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவோம்” என்றார்.

அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “ராம பக்தர்கள் மாநாடு அமைதியாக நடந்து முடிந்தது. கண்காணிப்பு கேமராக்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட்டது. அயோத்திக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு. அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.