Breaking News
சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டியது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனுக்காக நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2- ஆம் நாளான இன்று, இவ்விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதேபோல், பாஜகவினரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். கையில் பேனர்கள், அட்டைகள் ஏந்தியவாறு அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட கெடுபிடிகளை அகற்றும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.