Breaking News
‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் ரூ.15½ கோடி வசூல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது

‘கஜா’ புயல் தாக்கியதில், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. புயல் தாக்கி 13 நாட்கள் ஆன நிலையில், இன்னும் அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவடையவில்லை. வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந் தேதி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தொழிலதிபர்களும், பொதுமக்களும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேரிலும், ஆன்-லைன் மூலமும் நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை சுமார் ரூ.17 கோடி நிவாரண நிதி வசூலாகி இருந்தது. இந்த நிலையில், நேற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் பலர் சந்தித்து ‘கஜா’ புயல் சீரமைப்பு பணிகளுக்கு நிவாரண நிதியை அளித்தனர்.

அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதியை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். சன் டி.வி. குழுமத்தின் சார்பில் அதன் செயல் அலுவலர் சண்முகம் மற்றும் தலைமை நிதி அலுவலர் நாராயணன் ஆகியோர் ரூ.2 கோடிக்கான காசோலையையும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் பணியாளர்கள் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராகேஷ் குமார் ரூ.6 கோடியே 79 லட்சத்திற்கான காசோலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.

இதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சம், மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

மார்டின் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், டாக்டர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் சிந்து சார்லஸ் ஆகியோர் ரூ.5 கோடிக்கான காசோலையையும், நாகா நிறுவனத்தின் செயல் இயக்குனர் சவுந்தர் கண்ணன், தலைமை செயல் அலுவலர் மோனா கண்ணன் ஆகியோர் ரூ.11 லட்சத்துக்கான காசோலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.

மேலும், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 5 மாத ஓய்வூதியத் தொகையான ரூ.1 லட்சத்தையும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் கே.பாண்டுரங்கன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ராஜன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.

நேற்று ஒரே நாளில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் வசூலானது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.