Breaking News
ரஷியாவுடன் போர் பதற்றம் எதிரொலி உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்

உக்ரைனின் ஒரு அங்கமாக இருந்த கிரிமியாவை ரஷியா 2014–ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. மேலும் ரஷியா மீது அவை பொருளாதார தடை விதித்தன.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கிரிமியா பகுதியில் உக்ரைனின் 3 போர் கப்பல்கள் மீது ரஷியா துப்பாக்கிச்சூடு நடத்தி சிறை பிடித்தது. அவற்றின் ஊழியர்களாக இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.

இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது. இது ஆக்கிரமிப்பு முயற்சி என ரஷியாவை கண்டித்தது.

ஆனால் ரஷியாவோ, உக்ரைன் கப்பல்கள் தனது பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனால்தான் பலத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று என்றும் பதிலடி கொடுத்தது.

2014–ம் ஆண்டு கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்த பிறகு ரஷியாவும், உக்ரைனும் மோதிக்கொள்வது இதுவே முதல் முறை. அதனால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.

இதுபற்றி விவாதிப்பதற்கு நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியது. இந்த கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டாலும் ரஷியா முன்மொழிந்த திட்டம் ஏற்கப்படவில்லை. ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே இதில் பெரும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
ரஷியாவின் செயல், சர்வதேச சட்டத்தை மீறிய செயல். இது ஆபத்தானது என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கண்டனத்தை பதிவு செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனின் 27 பிராந்தியங்களில் 10 பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை அமல்படுத்த அந்த நாடு முடிவு எடுத்தது.
இவற்றில் 5 பிராந்தியங்கள், ரஷிய எல்லையில் உள்ளவை. 2 பிராந்தியங்கள், மோல்டோவாவில் இருந்து பிரிந்து வந்த டிரான்ஸ்–டேனிஸ்டர் பிராந்தியங்கள் (இங்கு ரஷிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன), 3 பிராந்தியங்கள் கருங்கடல் பகுதியையொட்டியவை ஆகும்.

இங்கு ராணுவ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான தீர்மானம், உக்ரைன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கொண்டு வந்து அனல் பறக்க விவாதிக்கப்பட்டது. முன்னதாக அந்த நாட்டின் அதிபர் போரோஷெங்கோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். குறிப்பிட்ட பகுதிகளில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டாலும்கூட, அடிப்படை சுதந்திரங்கள் பறிக்கப்பட மாட்டாது என அவர் உறுதி அளித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31–ந் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலை, அதிபர் போரோஷெங்கோ நிறுத்தி வைக்கக்கூடும் என சில எம்.பி.க்கள் கருத்து வெளியிட்டனர். அதை அவர் மறுத்தார்.

அத்துடன், ரஷியா முழு அளவில் படையெடுப்பு நடத்தினால் தனக்கு நிலையான அதிகாரம் தேவை என அவர் வலியுறுத்தினார்.

அதிபர் போரோஷெங்கோ பேச்சுக்கு பின்னர் ராணுவ சட்டம் அமல்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில் தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான (276) எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் ராணுவ சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் 27–ந் தேதிவரை 1 மாத காலத்துக்கு அமலில் இருக்கும்.

இந்த ராணுவ சட்டம், ராணுவ அனுபவம் உள்ள பொதுமக்களை ஒன்றுதிரட்டவும், ஊடகங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் கூட்டங்களை கட்டுக்குள் வைக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.