Breaking News
100 சதவீத தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; வங்கிகளுக்கு மல்லையா கோரிக்கை

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை வரும் 10 ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தெரிவித்துள்ளார். இதனால், விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:- “ அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல் இடுகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கர்நாடக நீதிமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன், யாரும் அதிகம் பேசவில்லை.

விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. நஷ்டங்கள் அதிகரித்ததால், வங்கி பணம் அங்கு சென்றது. அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன்?” எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து டுவிட்டரில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

லண்டன் நீதிமன்றத்தில், தீர்ப்பு வெளிவர 5 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டதை விமர்சித்து மற்றொரு டுவிட் செய்துள்ள விஜய் மல்லையா, வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.