Breaking News
சென்னையில், சட்டவிரோத மது விற்பனை நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை

தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குவது ‘டாஸ்மாக்’ மது விற்பனை மதுபான விலையை எவ்வளவு உயர்த்தினாலும், ‘குடிக்காமல் விடமாட்டேன்’ என்று உறுதியுடன் இருக்கும் மதுபிரியர்களே அதற்கு சாட்சி. குடியால் அழிந்த குடும்பங்கள் ஏராளம்.

அதற்காகத்தான் நிரந்தர மதுவிலக்கு கோரிக்கை தமிழகத்தில் பிரதானமாக விளங்குகிறது. தொடர் அழுத்தங்கள் காரணமாக ‘டாஸ்மாக் கடைகள் மூடல்’, ‘நேரம் குறைப்பு’ என அரசும் இதற்கான முதற்கட்ட முயற்சிகளை முன்னெடுத்தது. அரசு உத்தரவுப்படி காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட மதுக்கடைகள் தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

காற்றில் பறந்தது

ஆனால் அரசின் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு, ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாகவே இரவு 10 மணிக்கு ‘டாஸ்மாக்’ கடைகள் அடைக்கப்பட்டாலும், நேரம் தாண்டி கடைகளின் கதவை ரகசியமாக தட்டும் மதுப்பிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களை அவ்வப்போது ரோந்து வரும் போலீசார் விரட்டி அடிப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வு.

காலையில் எழுந்ததுமே மதுபானம் தேடி ‘டாஸ்மாக்’ கடையை நோக்கி ஓடும் வெறித்தனமான குடிமகன்களுக்காகவே சட்டவிரோத மது விற்பனையை சிலர் ரகசியமாக செய்து வருகிறார்கள்.

சட்டவிரோத விற்பனை

அதிகாலையிலேயே திறக்கும் டீக்கடைகளுக்கு இணையாக ‘டாஸ்மாக்’ கடைகளும் கோதாவில் குதித்து விடுகின்றன. இதனால் நகரில் உள்ள சில ‘டாஸ்மாக்’ கடைகளில் அதிகாலையிலேயே சிலர் நடமாடுவதை பார்க்க முடிகிறது. குடிமகன்களிடம் இவர்கள் பேரம் பேசுகிறார்கள். பின்னர் அருகில் உள்ள இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.

சில கடைகளில் ‘‌ஷட்டரை’ திறந்து கூட சட்ட விரோத மது விற்பனை நடக்கிறது. 24 மணி நேர மருந்தகங்கள் போல 24 மணி நேரமும் இயங்கும் மதுக்கடைகளும் செயல்படுவது தான் உச்சபட்ச கொடுமை. சமீபத்தில் அடாது மழை பெய்தபோதும், ‘டாஸ்மாக்’ கடையில் விடாமல் மது விற்பனை நடந்துகொண்டிருந்தது.

எதிர்பார்ப்பு

குறிப்பாக மூலக்கடை, பெரம்பூர், மணலி, கோவிலம்பாக்கம், செங்குன்றம், மாதவரம், எம்.ஜி.ஆர். நகர் போன்ற இடங்களில் தான் சட்டவிரோத மதுவிற்பனை ஜோராக நடக்கிறது. அதிலும் சில கடைகளில் காலை நேரத்திலேயே ஒளிவு மறைவின்றி மது விற்பனை நடக்கிறது. சில குடிமகன்கள் ஆர்வம் தாங்காமல் மது குடித்துவிட்டு, கடையின் முன்பே மல்லாந்து விடுகிறார்கள்.

இவர்களின் அலங்கோலமான நிலைமை, காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி–கல்லூரி மாணவிகளை முகம் சுழிக்க வைத்துவிடுகிறது. கூடுதல் விலைக்கு மதுவாங்கி ‘டாஸ்மாக்’ கடைகளே தஞ்சம் என்று காத்திருக்கும் கூலித்தொழிலாளிகள் குடும்பம் வாழ்வாதாரமின்றி தவிக்கிறது. இதுகுறித்து புகார்கள் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை என்று பெண்கள் விரக்தியுடன் கூறுகிறார்கள். எனவே இந்த சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அரசு கையாள வேண்டும் என்பதே பெண்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.