Breaking News
ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. 2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் விமானம் தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து பிரமாணப்பத்திரமாக சமர்பிர்க்க உத்தரவிட்டது.

அதன்படி, சீலிடப்பட்ட உறையில், விமானத்தின் விலை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் அளிக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.